தி லேன்செட் இதழில் வெளியாகியுள்ள ஆய்வறிக்கை, முதற்கட்ட சோதனையின் முடிவுகளின்படி, COVID-19 தடுப்பு மருந்து பாதுகாப்பானது, பங்கேற்பாளர்களால் நன்கு பொறுத்துக் கொள்ளக்கூடியது மற்றும் மனிதர்களில் புதிய கொரோனா வைரஸுக்கு எதிராக நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்கும் திறன் கொண்டது என்று விளக்குகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட 108 ஆரோக்கியமான தன்னார்வர்களில் நடத்தப்பட்ட சோதனையில், தடுப்பு மருந்து, வைரஸ் எதிர்ப்பு ஆன்டிபாடிகளை உருவாக்கி, புதிய கொரோனா வைரஸுக்கு (SARS-CoV-2) எதிராக நோயெதிர்ப்பு மண்டலத்தின் டி-செல் (T-Cells) களைத தூண்டியது. இருப்பினும், சீனாவின் பெய்ஜிங் இன்ஸ்டிடியூட் ஆப் பயோடெக்னாலஜி உள்ளிட்ட விஞ்ஞானிகள், SARS-CoV-2 நோய்த்தொற்றுக்கு எதிராக, இந்த தடுப்பு மருந்து பாதுகாக்கிறதா என்பதை உறுதிப்படுத்த மேலும் ஆராய்ச்சிகள் தேவை என்றனர்.
108 ஆரோக்கியமான தன்னார்வலர்களில் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையில், தடுப்பு மருந்து 28 நாட்களுக்குப் பிறகு நம்பிக்கை ஏற்படுத்தக் கூடிய முடிவுகளைக் கொடுத்துள்ளது. இறுதி முடிவுகள் ஆறு மாதங்களில் மதிப்பீடு செய்யப்படும் என்று ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர். “இந்த முடிவுகள் ஒரு முக்கியமான மைல்கல்லைக் எட்டியுள்ளன. புதிய அடினோவைரஸ் வகை 5 –வெக்டர் – COVID-19 (Ad5-nCoV) தடுப்பு மருந்தின் ஒரு டோஸ் 14 நாட்களில் இந்த வைரஸுக்கு என தனிப்பட்ட முறையில் எதிர்ப்பு ஆன்டிபாடிகள் மற்றும் தனிப்பட்ட டி-செல்களை உருவாக்குகிறது என்பதை சோதனை நிரூபிக்கிறது” என்று ஆய்வு இணை ஆசிரியரான, பெய்ஜிங் இன்ஸ்டிடியூட் ஆப் பயோடெக்னாலஜியை சேர்ந்த டாக்டர். வெய் கூறினார். ”இதுவரையிலான முடிவுகளின் அடிப்படையில், இந்த தடுப்பு மருந்தை மேலதிக ஆய்வுக்கு உட்படுத்தலாம்” என்றார் சென்.
“இருப்பினும், முடிவுகளை கவனமாக ஆராய்ந்து விளக்கம் கொள்ள வேண்டும்” என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்தனர். “ஒரு COVID-19 தடுப்பு மருந்தின் வளர்ச்சியில் உள்ள சவால்கள் நாம் முன்னறியாதவை. மேலும் இந்த தடுப்பு மருந்தின், நோயெதிர்ப்பு செயல்பாடுகளைத் தூண்டப்படும் திறன் COVID-19-லிருந்து மனிதர்களைப் பாதுகாக்கும் என்பதை உறுதியாக கூறமுடியாது,” என்று சென் விளக்கினார்.
“சோதனையிடப்பட்ட Ad5-வெக்டர்-COVID-19 தடுப்பு மருந்து மனிதர்களில் முதன்முதலில் பரிசோதிக்கப்பட்டது என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இது பலவீனமான, பொதுவான மனிதர்களின் சளியை ஏற்படுத்தும் அடினோவைரஸைப் அடிப்படையாக பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. – இது மனிதர்களின் நோய் எதிர்ப்பு செல்களை உடனடியாகத் தூண்டக் கூடியது. ஆனால், நோயை ஏற்படுத்த இயலாது – SARS-CoV-2 வைரஸின், ஸ்பைக் புரதத்திற்கான (SPIKE PROTEIN) ஜீனை நோயெதிர்ப்பு செல்களுக்கு வழங்குவதற்காக, இந்த சளி உண்டாக்கும் வைரஸினை இதில் பயன்படுத்துவதாக ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சளி உண்டாக்கும் வைரஸின் வெக்டரை பயன்படுத்தி, ஸ்பைக் புரதத்தின் ஜீன்கள் அந்த புரதத்தை தயாரித்து இரத்தம் மன்றும் நிணநீர் மண்டலத்தில் கலக்கவிடும். மனிதர்களின் நோயெதிர்ப்பு மண்டலம் அதை அடையாளம் கண்டு அதற்கு எதிரான ஆன்டிபாடிகளை உருவாக்கும். பின்னர் நிஜ கொரோனா வைரஸ் தாக்கும்போது, அதன் மேற்புறத்தில் உள்ள ஸ்பைக் புரதத்தை அடையாளம் கண்டு, கொரோனா வைரஸை தாக்கி அழிக்கும்” என்று ஆராய்ச்சியாளர்கள் விளக்கினர்.
சோதனையில், புதிய Ad5-nCoV தடுப்பு மருந்தின் பாதுகாப்பு மற்றும் திறனை அவர்கள் மதிப்பீடு செய்தனர், 18 முதல் 60 வயதுக்குட்பட்ட 108 ஆரோக்கியமான தன்னார்வலர்களில் வெவ்வேறு அளவுகளின் நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்குகின்றன. புதிய Ad5 தடுப்பு மருந்தின் குறைந்த டோஸ், நடுத்தர டோஸ் அல்லது அதிக டோஸில் முதல் டோஸ் பெற தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டனர். பின்னர் இவர்கள் குறிப்பிட்ட இடைவெளியில் பரிசோதிக்கப்பட்டனர்.
நமது நோயெதிர்ப்பு மண்டலம் இரண்டு பிரிவுகளாக செயல்படக் கூடியது. முதலாவது ஒரு நோய் கிருமி உள்நுழையும்போது அதற்கு எதிரான அதிர்ப்பு ஆன்டிபாடி எனப்படும் எதிர்ப்பு புரதங்களை உருவாக்கும். இது humoral response’ – ஹியூமோரல் செயல்பாடுகள்” எனப்படும். இரண்டாவது கிருமிக்கு எதிரான, கொல்லும் தன்மையுள்ள ஒருவகையான டி-செல்களை உண்டாக்குபவை.
தற்போதைய கொரோனா தடுப்பு மருந்து இந்த இரண்டு வகை நோயெதிர்ப்பு செயல்பாடுகளையும் தூண்டுகிறதா என்பதை அறிய, தடுப்பு மருந்து கொடுக்கப்பட்ட தன்னார்வலர்கள் குறிப்பிட்ட இடைவெளியில் பரிசோதிக்கப்பட்டனர். இதில், இந்த தடுப்பு மருந்து SARS-CoV-2 க்கு எதிராக ஆன்டிபாடி வழி மற்றும் டி-செல் வழி என இரண்டு வகை நோயெதிர்ப்பு செயல்பாடுகளையும் தூண்டியதாக அறிந்தனர்.
முடிவுகளின் அடிப்படையில், தடுப்பு மருந்து போடப்பட்ட 28 நாட்களுக்குள் எந்தவொரு மோசமான பாதகமான விளைவுகளையும் ஏற்படுத்தவில்லை எனவும், அனைத்து அளவு தடுப்பு மருந்தும் எடுத்துக் கொண்ட தன்னார்வலர்களால் நன்கு பொறுத்துக் கொள்ளப்பட்டது என்றார். சில பாதகமான விளைவுகள் நிகழ்ந்தன ஆனால், லேசான அல்லது மிதமானவை என்று அவர்கள் கூறினர். தடுப்பு மருந்தின் குறைந்த மற்றும் நடுத்தர அளவைப் பெறுபவர்களில் 83 சதவீதம் பேரும், உயர் டோஸ் குழுவில் 75 சதவீதம் பேரும் தடுப்பு மருந்து போட்ட 7 நாட்களுக்குள் குறைந்தது ஒரு பாதகமான விளைவை எதிர் கொண்டனர் என்றும் தெரிவித்தனர்.
அவ்வாறு உண்டான எதிர்விளைவுகள் என்பது, ஊசி போடப்பட்ட இடத்தில் லேசான வலி, அவர்களில் 50% பேருக்கு லேசான காய்ச்சல், சோர்வு, தலைவலி மற்றும் தசை வலி ஆகியவை இருந்துள்ளன. தடுப்பு மருந்து போட்ட இரண்டு வாரங்களுக்குள், தடுப்பு மருந்தின் அனைத்து டோஸ் அளவும் ஓரளவு நோயெதிர்ப்பு சக்தியைத் தூண்டுவதாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. பங்கேற்பாளர்களில் சிலர், இரண்டு வாரங்களுக்குள்ளாகவே, SARS-CoV-2-க்கு எதிராக ஆன்டிபாடிகளின் உருவாக்கத்தை வெளிப்படுத்தியதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். 28 நாட்களுக்குப் பிறகு, பெரும்பாலான பங்கேற்பாளர்கள் நான்கு மடங்கு ஆன்டிபாடிகளை உருவாக்கியதாக தெரிவித்தனர்.
குறைந்த மற்றும் நடுத்தர அளவிலான குழுக்களில் பங்கேற்பாளர்களில் 50 சதவீதம் பேரும், உயர்-அளவிலான குழுவில் முக்கால்வாசி பேர் SARS-CoV-2 க்கு எதிராக ஆன்டிபாடிகளைக் வெளிப்படுத்தியதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர். பெரும்பான்மையான தன்னார்வலர்களில், தடுப்பு மருந்து விரைவான டி-செல் செயல்பாட்டைத் தூண்டுவதாகவும் அவர்கள் கூறினர். மேலதிக ஆய்வுகளில், பெரும்பாலான பெறுநர்கள் நேர்மறையான டி- செல் செயல்பாட்டைக் காட்டியதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர். தடுப்பு மருந்து போட்ட 28 நாட்களுக்குப் பிறகு SARS-CoV-2 க்கு எதிராக கண்டறியக்கூடிய ஆன்டிபாடிகளை அனைவரும் கொண்டிருந்தனர்.
இருப்பினும், சாதாரண சளி உண்டாக்கும் அடினோவைரஸ் வகை-5 இதில் அடிப்படையாக பயன்படுத்தப்பட்டிருப்பதால், அதற்கென முன்பே இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி கொரோனாவிர்க்கு எதிரான ஆன்டிபாடி மற்றும் டி-செல் செயல்பாடு இரண்டின் அளவையும் குறைத்திருக்கலாம் என்று அவர்கள் சந்தேகிக்கின்றனர். மேலும் சோதனையின் முக்கிய குறைகாக, குறைந்த எண்ணிக்கையிலான பங்கேற்ப்பாளர்கள் பரிசோதிக்கப்பட்டிருப்பது, ஆய்வுக் காலம் குறைவாக இருப்பது மற்றும் உண்மையான நோயாளிகளைக் கொண்ட ஒப்பீட்டுக் குழு இல்லாமல் இருப்பது என பலவும் சுட்டிக் காட்டப்படுகிறது. எனவே, இந்த சோதனையில் இருக்கும் தடுப்பு மருந்து அனைவருக்கும் கிடைக்குமுன் மேலதிக ஆராய்ச்சி தேவைப்படும் என்று அவர்கள் கூறினர்.
தமிழில்: லயா