கொல்கத்தா: கொல்கத்தா ரயில்வே தலைமை அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் தீயை அணைக்கச் சென்ற 4 தீயணைப்பு வீரர்கள் உள்பட 9 பேர் உயிரிழந்துள்ள சோகம் நிகழ்ந்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சட்டமன்ற தேர்தலையொட்டி மெற்குவங்க மாநிலத்தில் அரசியல் பிரசாரங்கள் சூடுபிடித்துள்ளன. இந்த நிலையில், கொல்கத்தாவின் மையப் பகுதியில் தென் கிழக்கு மற்றும் கிழக்கு ரயில்வே மண்டலங்களின் தலைமை அலுவலகத்தில் நள்ளிரவு திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
ரெயில்வே கட்டிடத்தின் 13ஆவது மாடியில் நேற்று இரவு பரவிய தீ மளமளவென அடுத்தடுத்த தளங்களுக்கும் பரவியது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வந்த 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த பணியின்போது, லிப்டில் ஏற்பட்ட மின்கசவு காரணமாக, அதன்மூலம் தீயை அணைக்கும் பணிக்கு சென்ற 4 தீயணைப்பு வீரர்கள் நால்வரும் மின்சாரம் தாக்கி பலியாகினர். மேலும், 5 பேர் தீயில் சிக்கி இறந்தனர். மேலும் சிலரை காணவில்லை என கூறப்படுகிறது. அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
இந்த திடீர் தீ விபத்து நடந்த இடத்தை முதலமைச்சர் மம்தா பானர்ஜி நேரில் பார்வையிட்டார். அதைத்தொடர்ந்து, விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணமாக தரப்படும் என்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் தரப்படும் என்றார்.
தீ விபத்து பெரிய அளவில் இருக்கும் நிலையில் ரயில்வே உயரதிகாரிகள் ஒருவரும் சம்பவ இடத்திற்கு வரவில்லை என்றும் தீயணைப்பு பணிகளில் ரயில்வே தரப்பில் ஒத்துழைப்பு இல்லை என்றும் தெரிவித்த மம்தா எனினும் இவ்விவகாரத்தில் தான் அரசியல் செய்ய விரும்பவில்லை என்றார்.
இதற்கிடையில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயலும் இரங்கல் தெரிவித்து டிவிட் பதிவிட்டுள்ளார்.