நாமக்கல்: நாமக்கல் அருகே தீபாவளி சீட்டுக்காக வீட்டில் வைக்கப்பட்டிருந்த பட்டாசு வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில், அந்த வீட்டில் இருந்த 2 பேர் உடல்கருகி பலியானார்கள். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ளது மாதேஸ்வரன் மலை. இந்த பகுதியில் வசித்து வரும் பழனிச்சாமி என்பவருக்கு சொந்தமான வீட்டில், கடந்த 15 நாட்களுக்கு முன்பு ராஜா என்பவர் தனது குடும்பத்துடன் குடியேறினார். ராஜா தீபாவளி பலகார சீட்டு நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இன்னும் ஒருவாரத்தில் தீபாவளி நெருங்குவதால், சீட்டு போட்ட உறுப்பினர்களுக்கு கொடுப்பதற்காக ஏராளமான பட்டாசு பெட்டிகளை கொண்டு வந்து வீட்டினுள் அடுக்கி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் யாரும் எதிர்பாராதவிதமாக இரவு பட்டாசுகள் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் ஏற்பட்ட தீவிபத்தில் வீட்டிலிருந்த சமையல் எரிவாயு சிலிண்டரும் வெடித்து சிதறியது.
இதனால் அக்கம் பக்கத்தில் உள்ள இரண்டு வீடுகள் உட்பட 3 வீடுகளும் எரிந்து முழுவதுமாக சேதமடைந்தது. இச்சம்பவம் குறித்து வெப்படை தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறயினர் பல மணிநேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர்.
இந்த கோர தீ விபத்தில் சிக்கி ராஜாவும் அவரது நண்பர் ஒருவரும் உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த தமிழக மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து அதிகாரிகளிடம் மீட்புப் பணிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி உடனடியாக நிவாரணம் வழங்க வட்டாட்சியருக்கு உத்தரவிட்டார்.
பட்டாசு வெடித்து மூன்று வீடுகள் தீப்பிடித்து எரிந்து சேதமானதுடன் இருவர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.