சென்னை: குறிப்பிட்ட இந்த 5 வகையான விதிமீறலுக்கு மட்டுமே அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் கூறி உள்ளார். இது தொடர்பாக போக்குவரத்து காவல்துறைக்கு சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.

இந்தியாவிலேயே அதிக அளவு விபத்துக்கள் ஏற்படும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடும் ஒன்றாகும். தமிழ்நாட்டில் அதிக அளவிலான சாலை விபத்துகள், அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. பெரும்பாலும் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதே இந்த விபத்துகளுக்கு முக்கிய காரணமாக உள்ளது. ஆனால், இதில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
போக்குவரத்து காவல்துறையினர், வாகன நெரிசலை தடுக்காமல் வாகன ஓட்டிகளிடம் அபரதாம் வசூலிப்பதில் மட்டுமே ஆர்வம் காட்டுவதாக பொதுமக்கள் நேரடி குற்றச்சாட்டுக்களை கூறி வருகின்றனர். மேலும் வாகன அபராதம் தொடர்பாக பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்படுகிறது.
இந்த நிலையில், குறிப்பிட்ட 5 வகை குற்றச்சாட்டுக்களுக்கு மட்டுமே அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து காவல் அணையர் உத்தரவிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:-
- சாலைகளில் அதிவேகமாக வாகனம் ஓட்டுவது,
- இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் பயணிப்பது,
- நோ-என்ட்ரியில் வாகனம் ஓட்டுவது,
- மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது,
- இருசக்கர வாகனத்தில் இருவருக்கு மேல் பயணித்தல்
ஆகிய 5 வகையான விதிமீறலுக்கு மட்டுமே அபராதம் விதிக்க வேண்டும் என சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.
கும்பலாக நின்று போக்குவரத்து போலீசார் அபராதம் விதிப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் கும்பலாக நின்று போக்குவரத்து போலீசார் அபராதம் விதிப்பது தொடர்ந்து வருகிறது.