டில்லி

விரைவில் ரயிலில் புகை  பிடித்தால் அதிக அபராதம் விதிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

 

 

ரயிலில் புகை பிடிப்பது முழுவதுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.  மீறிப் புகை பிடிப்போருக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்படுகிறது.   கடந்த 13 ஆம் தேதி டில்லியில் இருந்து டேராடூன் சென்று கொண்டிருந்த சதாப்தி விரைவு ரயிலில் எஸ் 5 பெட்டியில் திடீரென தீ பிடித்தது.  அந்த பெட்டி உடனடியாக கழற்றி விடப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

விசாரணையில் யாரோ சிகரட் அல்லது பீடி துண்டை அணைக்காமல் வீசியதால் தீப்பிடித்தது தெரிய வந்தது.    இதையொட்டி ரயில்வே வாரிய உறுப்பினர்கள், மண்டல பொது மேலாளர் ஆகியோருடன் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் ஆலோசனைக் கூட்டம் நடத்தி உள்ளார்.  கூட்டத்தில்  ரயில்வே சொத்துக்களைப் பாதுகாக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ரயில்வே உயர் அதிகாரி ஒருவர், “ரயிலில் புகை பிடிப்போருக்கு விதிக்கப்படும் அபராதத்தை விரைவில் கடுமையாக அதிகரிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.  அத்துடன் ரயில்வே சொத்துக்களைச் சேதம் செய்வோரை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்கச் சட்டத்தைத் திருத்த திட்டமிடப்பட்டுள்ளது.” எனச் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.