டெல்லி: மோடி தலைமையிலான பாஜக அரசின் நிர்வாகத்திறமையின்மை மற்றும் கொரோனா பொதுமுடக்கம் காரணமாக நாடு முழுவதும் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ள நிலையில், இதற்கு உடனடி தீர்வை தேவை என மத்தியஅரசை ராகுல்காந்தி வலியுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக ராகுல்காந்தி பதிவிட்டுள்ள டிவிட்டில் கூறியிருப்பதாவது, நாட்டில் வேலை யின்மை விகிதம் ஆகஸ்ட் மாதம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கிராமங்களிலும் வேலையின்மை அதிகரித்துள்ளதை இது காட்டுகிறது. இந்நிலை தொடர்ந்தால், நாடு மிகவும் மோசமான நிலைக்கு சென்றுவிடும்.நாட்டின் பொருளாதார பிரச்னைகள், வேலை வாய்ப்பின்மை, விவசாயிகள் பிரச்னை, தொழிலாளர்கள் பிரச்னை, ஏழை மக்களின் பிரச்னைகள் குறித்து, நடவடிக்கை எடுக்க கோரி, மத்திய அரசை காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருகிறது.

ஆனால், உண்மையான தீா்வுக்கு முயற்சிக்காமல், பிரச்னையை அதிகரிக்கும் போக்கில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. இப்போது, இளைஞா்கள் மத்தியில் வேலையின்மை வேகமாக அதிகரித்து வருகிறது. இந்தப் பிரச்னைக்காவது உடனடியாக தீா்வுகாண மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் என்று ராகுல் கூறியுள்ளாா்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா வதேரா வெளியிட்டுள்ள டிவிட் பதிவில், ‘நாட்டில் உள்ள பல தனியாா் நிறுவனங்கள் தொடா்ந்து பணியாளா்களை வேலையில் இருந்து நீக்கி வருகிறது. அதே நேரத்தில் அரசுத் துறையில் வேலைவாய்ப்பும் குறைக்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்த உண்மைகளை மறைத்து, நாட்டு மக்களின் நிலை மிகவும் சிறப்பாக இருப்பதுபோல் பொய்ப் பிரசாரத்தை மத்திய அரசு முன்னெடுத்து வருகிறது. முதலில், பொதுத்துறை நிறுவனங்களை தனியாா்மயமாக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு நிறுத்த வேண்டும்’

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.