இந்தியன்-2 படத்தை முடித்துக் கொடுக்காமல் இயக்குனர் ஷங்கர் பிற படங்களில் ஈடுபடக் கூடாது என படத் தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடெக்ஷன்ஸ் உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தது.

இந்தியன்-2 (Indian-2) படப்பிடிப்பில் ஏற்பட்டுள்ள தாமதத்துக்கு தான் மட்டும் காரணமல்ல என்பதை விளக்கியுள்ளார் இயக்குனர் ஷங்கர்.

கொரோனா தொற்று, படப்பிடிப்பின் துவக்கத்தில் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து , கமலின் ஒப்பனை தொடர்பான விஷயங்களில் எற்பட்ட தாமதம் என பல விஷயங்களை முன்னிறுத்தியுள்ளார் ஷங்கர்.

படத்தை தயாரிக்க 270 கோடி ரூபாய் செலவாகும் என பட்ஜெட் போட்ட நிலையில், அதை குறைக்கும்படி லைகா நிறுவனம் கூறியதாகவும், அதை ஏற்று பட்ஜெட்டை 250 கோடியாக குறைத்தும், படப்பிடிப்பை துவங்குவதில் தேவையில்லாத தாமதத்தை ஏற்படுத்தியதாகவும் லைகா மீது புகார் தெரிவித்துள்ளார்.

2020 ஜூன் முதல் 2021 மே வரையிலான ஓராண்டு காலத்தை வீண்டித்தது லைகா நிறுவனம் தான் எனவும், இதன் காரணமாக தனக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

எனவே, தனக்கெதிராக லைகா நிறுவனம் தாக்கல் செய்த இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் கோரியுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், விசாரணையை ஜூன் 4ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

கோர்ட்டில் வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் ஷங்கருக்கு எதிராக அடுத்தகட்ட நடவடிக்கையாக இந்தியன் 2 தயாரிப்பு நிறுவனம் தெலுங்கு, இந்தி திரைப்பட வர்த்தக சபைக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

இதற்கு இரு தரப்பும் சுமூக பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவும் நீதிபதி அறிவுறுத்தி இருந்தார். ஆனால் அதில் தீர்வு எட்டப்படவில்லை என இரு தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில், இரு தரப்புக்கும் இடையேயான பிரச்சினையில் தீர்வுகாணும் மத்தியஸ்தராக உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.பானுமதியை நியமித்து நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டிருந்தார்.

மத்தியஸ்தர பேச்சுவார்த்தை முடிந்து அதில் எடுக்கப்படும் முடிவை ஓய்வுபெற்ற நீதிபதி பானுமதி அறிக்கையாக தாக்கல் செய்த பிறகு, வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் எனவும் நீதிபதி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று உயர்நீதிமன்றம் இறுதித் தீர்ப்பு அளித்துள்ளது. அதன்படி இயக்குனர் ஷங்கர் மற்ற திரைப்படங்களை இயக்க அனுமதி அளித்து, லைகா புரொடக்ஷன்ஸ் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.