ஒரு படம் வெற்றி அடைந்துவிட்டால் அதே மாதிரி அடுத்தடுத்த படங்கள் வருவது தமிழ்த் திரைப்பட கலாச்சாரம். ஆனால் இரண்டாம் பாகம் என்று குறிப்பிட்டு வருவது பாராட்ட வேண்டிய விசயம்தானே.
அப்படி வந்திருக்கிறது கலகலப்பு 2.
காசியில், ஜெய்க்கு சொந்தமான மேன்ஷனை நிர்வகித்து வருகிறார் ஜீவா. அந்த மேன்ஷனை விற்க ஜெய் முடிவு செய்து அங்கு செல்கிறார்…
இன்னொரு புறம், தமிழக அமைச்சரின் கணக்கு வழக்குகள் உள்ள லேப்டாப்பை எடுத்துச் சென்றுவிடும் ஆடிட்டர், காசிக்கு வந்து வாங்கிக்கொள்ளும்படியும் அதற்கு ஐந்து கோடி ரூபாய் தர வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கிறார். அவரைத் தேடி அமைச்சர் சார்பாக காசிக்கு வருகிறார் போலீஸ் அதிகாரி ராதாரவி..
இதற்கிடையே குறிப்பிட்ட மேன்ஷனை ஆட்டையப்போட முயற்சிக்கிறது ஒரு சாமியார் கும்பல்..
இந்த விவகாரங்கள் எல்லாம் தீர்ந்து எப்படி சுபம் ஆனது என்பது மீதிக்கதை.
படத்தில் பெரிய நட்சத்திரப்பட்டாளமே நடித்திருக்கிறது. அதிரடி நாயகன் ஜீவா, உணர்ச்சிகர நாயகன் ஜெய், அதே போல கெத்ரீன் தெரசா, ஹீரோயின் நிக்கி கல்ராணி என்று இரண்டு நாயகிகள். போலி சாமியார் யோகி பாபு, சதீஷ், விடிவி கணேஷ், ராதாரவி, ரோபோ ஷங்கர், மனோ பாலா என நட்சத்திரப்பட்டாளம் நீள்கிறது.
ஆரம்பம் முதலே படம் கலகலப்புதான். ஆனால் முதல் பாதியில் அடிக்கடி பாடல்கள் குறுக்கிட்டு சிரிப்புக்க பிரேக் போடுகின்றன. யோசனையே இன்றி அவற்றை நீக்கலாம். . ‘ஒரு குச்சி ஒரு குல்ஃபி’ பாடல் மட்டும் முணுமுணுக்க வைக்கிறது. மற்றபடி இசையமைப்பாளர் ஆதி.. பாதி.
காசி என்றாலே அகோரிகள்தான் நினைவுக்கு வருவார்கல் தமிழ்ப்பட ரசிகர்களுக்கு. ஆனால் இதில் காசியின் இயல்பான முகத்தை அழகாக படமாக்கியிருக்கிறார்கள். அதற்கு யூ.கே.செந்தில் குமாரின் கேமரா பக்கபலமாக இருக்கிறது.
வழக்கம் போல நகைச்சுவையில் இறங்கி அடித்திருக்கிறார் சுந்தர் சி. லாஜிக் எல்லாம் பார்க்காமல், சிரித்துவிட்டு வரலாம்.