மும்பை
இந்திய திரையுலகின் 100க்கும் மேற்பட்ட பிரபலங்கள் ஒன்றிணைந்து மக்களாட்சியை காப்போம் என்னும் அமைப்பின் கீழ் பாஜகவை எதிர்க்கின்றனர்.
நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் பாஜக பல திரை பிரபலங்களை களம் இறக்கி உள்ளது. அந்தக் கால கனவுக்கன்னி ஹேமமாலினி மதுரா தொகுதியில் போட்டி இடுகிறார். நடிகை ஜெயப்ரதாவும் களமிறங்குவார் என எதிர்பார்க்கபடுகிறது. போஜ்பூரி நடிகர்களை உ. பி மாநிலத்தில் பாஜக களமிறக்கி உள்ள்து. ஆனால் திரையுலக பிரபலங்களே பாஜகவுக்கு எதிராக கிளம்பி உள்ளனர்.
இந்திய திரையுலகின் பிரபலங்களான வெற்றி மாறன், ஆனந்த் பட்வர்தன், சனல்குமார் சசிதரன், சுதேவன், தீபா தன்ராஜ், குருவீந்தர் சிங், புஷ்வீந்தர் சிங், கபீர்சிங் சவுத்ரி, அஞ்சலி மாண்டிரோ, பிரவின் மோர்ச்சலே, பினா பால் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் ஜனநாயகத்தை காப்போம் என ஒரு அமைப்பை உண்டாக்கி இருக்கிறார்கள். அந்த அமைப்பின் சார்பில் இணைய தளத்தில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதில், “பாஜக அரசு தொடர்ந்து வெறுப்பு அரசியல், பகுதி பாகுபாடு, தலித்துக்கள், இஸ்லாமியர்கள் மற்றும் விவசாயிகளின் நலனுக்கு எதிரான நடவடிக்கைகள், தணிக்கையை கடினமாக்கல் உள்ளிட்ட பல சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறது.
நாங்கள் கலாசாரம் மற்றும் வசிக்கும் இடத்தில் வேறுபட்டிருந்தாலும் ஒற்றுமையாகவே வாழ்கிறோம். இந்த அருமையான நாட்டின் குடிமகனாக இருப்பதில் நாங்கள் பெருமை அடைகிறோம். ஆனல் எங்களை பிரிக்க பாஜக அரசு 2014 ஆம் ஆண்டில் இருந்தே முயன்று வருகிறது.
பசு பாதுகாப்பு என்னும் பெயரில் மக்கள் மீது வன்முறை, கும்பலால் தாக்கப்படுதல் போன்றவை இந்த ஆட்சியில் அதிகரித்துள்ளன. இதன் மூலம் இந்தியா துண்டாடப்படும் என்னும் அச்சம் எழுந்துள்ளது. இதை எதிர்த்து கேட்போர் மீது தேச விரோதி என்னும் முத்திரை குத்தப்படுகிறது.
மீண்டும் தேசத்தில் போர் கோலம் ஏற்படாமல் தடுக்க வேண்டிய நிலையில் நாம் இப்போது இருக்கிறோம். நாட்டுக்கு போர் அபாயம் ஏற்படும் என தெரிந்தும் அரசு ஆயுத தாக்குதல்களை தொடர்ந்து வருகிறது இவற்றை தடுக்க எங்கள் மக்களாட்சியை காப்போம் என்னும் அமைப்பு பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம் என உங்களை கேட்டுக் கொள்கிறது” எனகூறப்பட்டுள்ளது.