கல்யாண விருந்தில் கூடுதல் அப்பளம் தர மறுத்ததற்காக நடைபெற்ற சண்டையில் மூன்று பேருக்கு காயம் ஏற்பட்டது இது தொடர்பாக 15 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் ஆலப்புழா மாவட்டம் ஹரிபாத் அருகே உள்ள முட்டத்தைச் சேர்ந்த மணமகளுக்கும் திருக்குன்னம்புழாவைச் சேர்ந்த மணமகனுக்கும் ஞாயிறன்று திருமணம் நடைபெற்றது.
சூண்டுபலக ஜங்ஷனில் உள்ள கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற இந்த திருமண நிகழ்ச்சியில் மதிய உணவின் போது மாப்பிள்ளையின் நண்பர் ஒருவர் கூடுதலாக அப்பளம் வேண்டும் என்று கேட்டுள்ளார்.
விருந்து பரிமாறியவர்கள் அப்பளம் தர மறுத்ததைத் தொடர்ந்து மாப்பிள்ளையின் நண்பர்களுக்கும் அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றது.
பின்னர், வாக்குவாதம் முற்றி இரு கோஷ்டிகளாக பிரிந்து ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர்.
இதில் மண்டபத்தில் இருந்த கடப்பா கல்லால் ஆன டேபிள் மற்றும் பிளாஸ்டிக் சேர்கள் உடைந்தன.
சண்டையை தடுக்க வந்த மண்டபத்தின் உரிமையாளர் முரளீதரன் (74 வயது) மண்டை உடைந்தது தவிர ஜோஹன் (21) ஹரி (20) ஆகிய இருவருக்கும் காயம் ஏற்பட்டது.
இது தொடர்பாக காவல்துறையில் புகாரளிக்கப்பட்டதை அடுத்து அங்கு வந்த போலீசார் இருதரப்பினரையும் சமாதானம் செய்து வைத்து கைகலப்பில் ஈடுபட்ட 15 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த சண்டையில் மண்டபத்தில் இருந்த டேபிள் மற்றும் சேர் அப்பளமாக நொறுங்கியதால் ரூ. 1.5 லட்சம் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக உரிமையாளர் புகாரளித்துள்ளார்.