2025 முதல் தாய்லாந்து வரும் சுற்றுலா பயணிகளிடம் பயண வரி வசூலிக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.

தாய் மண்ணில் காலடி எடுத்து வைப்பதற்கான கட்டணம் குறித்த இந்த திட்டத்திற்கு தாய்லாந்து அமைச்சரவை 2023 பிப்ரவரி-யில் கொள்கை ரீதியாக ஒப்புதல் வழங்கியது.

இந்த நிலையில், தரையிறங்க கட்டணம் என்றிருந்ததை “பயண வரி” என்று மாற்றியுள்ள அந்நாட்டு சுற்றுலா மற்றும் விளையாட்டு அமைச்சகம் இந்த புதிய வரி தொடர்பான மசோதாவை விரைவில் அமைச்சரவை ஒப்புதலுக்கு அனுப்பவுள்ளதாகக் கூறியுள்ளது.

விமானம் மூலம் தாய்லாந்து வரும் வெளிநாட்டினருக்கு 300 தாய் பாட்-டும் (இந்திய மதிப்பில் ரூ. 750) தரை மற்றும் கடல் வழியாக வரும் வெளிநாட்டினருக்கு 150 தாய் பாட்-டும் கட்டணம் விதிக்க திட்டமிட்டுள்ளது.

இந்த கட்டணத்தின் ஒரு பகுதி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் காப்பீடிற்கு செலவிடப்படும் என்றும் மீதி தொகை சுற்றுலா வளர்ச்சிக்காக செலவிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

30 நாட்கள் விசாவுடன் வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணி அசம்பாவிதமாக இறக்க நேரிட்டால் காப்பீட்டுத் தொகையாக 1 மில்லியன் தாய் பாட் (சுமார் ரூ. 25 லட்சம்) இழப்பீடாக வழங்கப்படும் காயமடைந்தர்வர்களுக்கு அதிகபட்சமாக 500,000 தாய் பாட் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த இழப்பீடு வெளிநாட்டு பயணிகள் வழக்கமாக வைத்திருக்கும் காப்பீட்டுடன் சேர்த்து மேலதிகமாக வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

தாய்லாந்து வரும் வெளிநாட்டு பயணிகளில் 87 சதவீதம் பேர் 30 நாட்களுக்கும் அதிகமான விசா உடன் வரும் நிலையில் புதிதாக விதிக்கப்படும் பயண வரி மூலம் தாய்லாந்து அரசு கணிசமான தொகையை சுற்றுலா துறை மூலம் வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமைச்சரவை ஒப்புதலை அடுத்து 2025ம் ஆண்டு மத்தியில் விமானத்தில் வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு முதலில் அமல்படுத்தப்பட உள்ளது.

இந்த புதிய பயண வரியில் இருந்து அண்டை நாடுகளின் எல்லையோரம் இருந்து வரும் வியாபாரிகளுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது.