சென்னை: ஆயுஷ் மருத்துவ படிப்புகளான சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இணையதளத்தில் வெளியாகி உள்ளது. வரும் 28ந்தேதி முதல் கலந்தாய்வு நடைபெறும் என இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் கீழ் தமிழ்நாட்டில் சென்னை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவக் கல்லூரி, யுனானி மருத்துவக் கல்லூரி, பாளையங்கோட்டையில் சித்த மருத்துவக் கல்லூரி, மதுரை, திருமங்கலத்தில் ஓமியோபதி மருத்துவக் கல்லூரி மற்றும் நாகர்கோவில் அருகே கோட்டாறில் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி உள்ளன.  மேலும், 25 தனியார் கல்லூரிகளில் உள்ளன.

இந்த கல்லூரிகளில் மூலம்   சித்தா, ஆயுர்வேத, யுனானி, ஓமியோபதி (பிஎஸ்எம்எஸ், பிஏஎம்எஸ், பியுஎம்எஸ், பிஎச்எம்எஸ்) ஆகிய பட்டப்படிப்புகளுக்கு 2021-22ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம்  கடந்த டிசம்பர் 28ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கி  ஜனவரி 18ம் தேதி மாலை 5.30 மணிக்கு முடிவடைந்தது.

விண்ணப்பங்கள் பரிசீலனைக்குப்பின், தகுதியானவர்களுக்கான தரவரிசைப் பட்டியல்கள் www.tnhealth.tn.gov.in என்ற சுகாதாரத்துறை இணையதளத்தில் பிப்ரவரி 22ந்தேதி வெளியிடப்பட்டது.

அதில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 3,721 பேர் இடம் பெற்றுள்ளனர். நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 989 பேரும், தனியார் கல்லூரிகளின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 761 பேரும் இடம் பிடித்துள்ளனர்.

இதையடுத்து சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகத்தில் வரும் 28ம் தேதி தொடங்கி மார்ச் 8ம் தேதி வரை நடைபெற உள்ளது.

முதல் நாளில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு கலந்தாய்வு நடக்கிறது. தரவரிசைப் பட்டியல்கள் மற்றும் கலந்தாய்வு தொடர்பான விவரங்களை முழுமையாக அறிந்து கொள்ள www.tnhealth.tn.gov.in என்ற சுகாதாரத்துறை இணையதளத்தை பார்த்து தெரிந்துக் கொள்ளலாம் என்று இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் கீழ் தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக்கல்லலூரிகளில் ஆயுஷ் மருத்துவத்துக்கு மொத்தம் 330 இடங்கள் உள்ளன. இதில் 50 இடங்கள் மத்தியஅரசுசின் ஒதுக்கீட்டுக்கு சென்றுவிடும். மீதமுள்ள 280 இடங்களுக்கு கவுன்சிலிங் நடைபெற உள்ளது.  இதில், 15 சதவீத இடங்களுக்கு மட்டும் மத்திய  அரசு கலந்தாய்வு நடத்துகிறது.

அதுபோல 25 தனியார் கல்லூரிகளில்  மொத்தம்  1,600 இடங்கள் உள்ளன.இதில்,  15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகிறது. மீதமுள்ள இடங்களில் 65 சதவீதம் மாநில அரசுக்கும், 35 சதவீதம் நிர்வாக ஒதுக்கீட்டுக்கும் உள்ளன. அரசு ஒதுக்கீடு இடங்கள், நிர்வாக ஒதுக்கீடு இடங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளின் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கு மாநில அரசு கலந்தாய்வு நடத்தி வருகிறது.