புதுடெல்லி: இந்தியாவில் மிகுந்த ஏழ்மையில் வாடும் 20% குடும்பங்களை இலக்கு வைப்பதே குறைந்தபட்ச வருவாய் உத்தரவாத திட்டம் என்பது உள்ளிட்ட பல தகவல்கள் வெளிவந்துள்ளன.

காங்கிரஸ் கட்சியால் அறிவிக்கப்பட்டிருக்கிறது குறைந்தபட்ச வருவாய் உத்தவாத திட்டம். இந்த திட்டத்தின் உள்ளார்ந்த அம்சங்கள் குறித்து பல தகவல்கள் வெளிவந்துள்ளன.

இத்திட்டத்திற்கு இந்தி மொழியில் நியூந்தம் ஆய் யோஜனா என்று பெயர் வைத்தவர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி. நாட்டின் 5 கோடி குடும்பங்களைச் சென்றடைவதே இதன் இலக்கு.

அதன்மூலம் 25 கோடி மக்கள் பலனடைவார்கள். இத்திட்டத்தின் மூலம், ஒரு குடும்பம் மாதம் ரூ.10,000 வருமானம் ஈட்டுகிறதென்றால், அரசாங்கம் அதில் ரூ.2000 ஐ சேர்க்கும். ஒரு குடும்பத்திற்கு மாதம் ரூ.12,000 வருமானம் என்பதுதான் திறனளவு வருமானம்.

இது நிபந்தனை அடிப்படையிலான திட்டமல்ல. நேரடியான பண பரிமாற்றம் தொடர்பானது. எனவே, நேரடியாக பயனாளரின் வங்கிக் கணக்கிற்கே பணம் சென்று சேர்ந்துவிடும். இந்த திட்டத்திற்கான மொத்த செலவினத் தொகை ரூ.3,60,000 கோடி அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.8% ஆகும்.

– மதுரை மாயாண்டி