அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோருக்கு மரண தண்டனை வழங்கும் ஃபத்வா அறிவிப்பை ஈரானின் மூத்த ஷியா மதகுரு, கிராண்ட் அயதுல்லா நாசர் மகரெம் ஷிராசி, வெளியிட்டுள்ளார்.

அவர்களை “கடவுளின் எதிரிகள்” என்று முத்திரை குத்தி, உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் மற்றும் முஸ்லீம் நாடுகள் ஒன்றிணைந்து அவர்களுக்கு எதிராகப் போராட அழைப்பு விடுத்துள்ளார்.

இஸ்லாமிய குடியரசின் தலைமைக்கு அல்லது அதன் உயர் மதத் தலைவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் எந்தவொரு தனிநபரும் அல்லது ஆட்சியும் மொஹரெப்பாகக் (கடவுளுக்கு எதிராகச் செயல்படுபவர்) கருதப்படுவதாகவும், அயதுல்லா மகரெம் தனது அறிவிப்பில் கூறியுள்ளார்.

ஈரானிய சட்டத்தின்படி, ஒரு மொஹரெப்பை மரணதண்டனை அல்லது நாடுகடத்தல் மூலம் கடுமையாக தண்டிக்க முடியும். “முஸ்லிம்கள் அல்லது இஸ்லாமிய நாடுகளிடமிருந்து இந்த எதிரிகளுக்கு எந்தவொரு ஒத்துழைப்பும் அல்லது உதவியும் ஹராம் (தடைசெய்யப்பட்டது)” என்று மகரெம் ஈரானின் மெஹர் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

கரெமின் ஃபத்வா, உலக முஸ்லிம்கள் அனைவரும் இந்த எதிரிகள் தங்கள் தவறுகள் மற்றும் வார்த்தைகளுக்கு வருத்தப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்தது. இந்த பிரச்சாரத்தில் இழப்பு அல்லது சிரமத்தை அனுபவிக்கும் எந்தவொரு முஸ்லிமும், “இறைவனின் பாதையில் ஒரு போராளியாக வெகுமதி பெறுவார்” என்று அவர் கூறினார்.

ஈரானின் இஸ்லாமிய தண்டனைச் சட்டத்தின் கீழ், ஒரு குற்றவாளி மொஹரெப்பை தூக்கிலிடலாம், சிலுவையில் அறையலாம், கை மற்றும் கால்களை துண்டிக்கலாம் அல்லது நாடு கடத்தலாம்.

ஈரான் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேலுக்கு ஈரான் பதிலடி கொடுத்தது ஜூன் 13ம் தேதி துவங்கிய இஸ்ரேல் – ஈரான் இடையிலான இந்தப் போரை அடுத்து ஈரானின் அணு ஆயுத தளங்கள் மீது அமெரிக்கா குண்டு வீசி அழித்தது.

இதையடுத்து 12 நாள் போர் முடிவுக்கு வந்தது, இந்த நிலையில் டிரம்ப் மற்றும் நெதன்யாகு-வுக்கு எதிராக இஸ்லாமிய சட்டப்படி ஃபத்வா அறிவிப்பு வெளியிட்டிருப்பது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.