புதுடெல்லி: மதுபான சந்தையில் முதன்முதலாக இந்திய சிங்கிள் மால்ட் விஸ்கியை அறிமுகப்படுத்தி, அனைவரையும் அசரவைத்த நீலகண்ட ராவ் ஜக்டேல், மே மாதம் 9ம் தேதியன்று தனது 66வது வயதில் காலமானார்.
பெங்களூரில் இயங்கும் அம்ருத் டிஸ்டிலெரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவராக அவர் இருந்தார். அவரின் மரணம், ஆல்கஹால் தொழில்துறையை பெரியளவில் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
இவர் தொடர்பாக கூறப்படுவதாவது; தனது தந்தையின் வழியாக இந்த மதுபான தயாரிப்பு தொழிலுக்கு வந்த நீலகண்ட ராவ், எதையும் புதுமையாக முயற்சித்துப் பார்ப்பதில் தணியாத ஆர்வம் கொண்டவர்.
இவரின் நிறுவனமும் பல்லாண்டுகளாக வழக்கமான விஸ்கி தயாரிப்புகளிலேயே ஈடுபட்டு வந்தாலும், புதுமை விரும்பியான இவரின் முயற்சியால் தயாரித்து வெளிவிடப்பட்ட சிங்கிள் மால்ட் விஸ்கி, ஆல்கஹால் சந்தையில் பெரிய வரவேற்பைப் பெற்றது.
அகில உலகளவில் இவர் பெயர்பெற்றாலும், இந்திய தொழிலதிபர்கள் எப்போதுமே தங்களது இந்தியத் தன்மையை விட்டுவிடக்கூடாது என வலியுறுத்துபவர். மேலும், தொழிலதிபர்கள் கண்ணியமாக இருப்பதோடு, நுகர்வோரையும் விழிப்படையச் செய்ய வேண்டுமென்ற கொள்கையில் உறுதியாக நின்றவர்.
அவரின் அம்ருத் நிறுவனம், தனது தயாரிப்புகளுக்கு எப்போதும் இந்தியா தொடர்பான பெயர்களையே சூட்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் மறைவு உலகெங்கும் உணரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.