டில்லி

திக அளவில் ரொக்க பரிவர்த்தனை நடைபெறும் 65 சுங்கச்சாவடிகளுக்கு ஃபாஸ்டாக் முறையில் இருந்து மத்திய அரசு விலக்கு அளித்துள்ளது.

நாடெங்கும் உள்ள சுங்கச் சாவடிகளில் ரொக்க கட்டணத்துக்கு பதில் மின்னணு பரிவர்த்தனை மூலம் கட்டணம் செலுத்த ஃபாஸ்டாக் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.   இந்த முறைப்படி ஃபாஸ்டாக் கார்ட் எனப்படும் முறைப்படி அட்டைகள் மூலம் முன் கூட்டியே தொகை செலுத்தப்படுகிறது.   வாகனங்கள் அந்த வழியே செல்லும் போது கட்டணம் செலுத்த வரிசையில் நிற்க வேண்டி இருக்காது.   மின்னணு மூலம் ஏற்கனவே செலுத்தி உள்ள தொகையில் இருந்து கழித்துக் கொள்ளப்படும்.

இவ்வாறு நடக்க வசதியாக அனைத்து சுங்கச் சாவடிகளிலும் இம்முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  இந்த கட்டாயமாக்கல் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.   தேசிய நெடுஞ்சாலையில் உள்ள 535 சுங்கச்சாவடிகளில் இதற்காக மின்னணு வரிசை முறை அமைக்கப்பட்டுள்ளது.   இது குறித்து நேற்று தேசிய நெடுஞ்சாலை அமைச்சகம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், “ஜனவரி 15 முதல் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்த ஃபாஸ்டாக் முறை கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.   இதற்காக நாட்டில் உள்ள 535சுன்க்கசாவடிகளிலும் புதிய வரிசை முறை அமைக்கப்பட்டுள்ளது.   ஆயினும் இதில் 65 சுங்கச்சாவடிகளுக்கு இம்முறையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த சுங்கச்சாவடிகளில் மின்னணு வரிசையைத் தவிர ரொக்கக் கட்டணம் செலுத்தும் வரிசையும் அமைக்கப்பட உள்ளது.   இந்த சுங்கச்சாவடிகள் நாட்டில் அதிக அளவில் ரொக்க கட்டணம் வசூலாகும் இடங்களாகும்.   இந்த வழியாக பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்காக மொத்தமுள்ள வரிசைகளில் 25% வரை ரொக்க பரிவர்த்தனை வரிசைகளாகத் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.