டெல்லி: நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி தனித்து போட்டியிடும் என்று அக்கட்சி தலைவர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
28கட்சிகளை கொண்ட இண்டியா கூட்டணியில் இடம்பெற்றிருந்த காஷ்மீர் மாநில தேசிய மாநாடு கட்சி, தற்போது திடீரென மக்களவை தேர்தலில் தனித்து போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளது கூட்டணி கட்சிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் ஆளும் பாஜகவை தோற்கடிக்கும் நோக்கில் கடந்த 2023 ஜூலை மாதம், காங்கிரஸ் கட்சி தலைவர் கார்கே, ஒடிசா முதல்வர் நிதிஷ் குமார், மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி, கெஜ்ரிவால் உட்பட 26 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பெங்களூருவில் ஒன்று கூடி இண்டி கூட்டணியை உருவாக்கினர். இந்த கூட்டணிக்கு ஏற்கனவே இருந்தஐக்கிய முற்போக்குக் கூட்டணி’ என்ற பெயருக்குப் பதிலாக புதிய பெயராக இண்டியா என அறிவிக்கப்பட்டது. அதன்படி, I – Indian, N – National, D – Democratic, I – Inclusive, A – Alliance. அப்போது செய்தியாளர்களிடம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே , “இது, நாட்டின் ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் காப்பாற்றுதற்கான மிகவும் முக்கியமான நாள், நாட்டின் நலன் கருதி நாங்கள் அனைவரும் இங்கு ஒன்றிணைந்துள்ளோம். இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் பல்வேறு விவகாரங்களை விவாதித்து ஒருமித்த குரலில் தீர்மானங்களை ஆதரித்துள்ளனர். கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் கூட்டணிக்கு இந்தப் பெயரை வைக்க ஒப்புக்கொண்டனர். முதலில் எங்களுடைய கூட்டணி யுபிஏ (UPA) ஐக்கிய முற்போக்கு கூட்டணி என்று அழைக்கப்பட்டது. தற்போது 26 கட்சிகளும் ஒருங்கிணைந்து வழங்கியுள்ள பெயர், ‘இந்தியா’. Indian National Democratic Inclusive Alliance.அதாவது, இந்திய தேசிய ஜனநாயக உள்ளடங்கிய கூட்டணி என கூறினார். தொடக்க காலத்தில் இந்த கூட்டணியில் மேலும் 2 கட்சிகள் இணைந்தன. இதனால் எதிர்க்கட்சிகளின் கூட்டணியின் பலம் மேலும் அதிகரித்து 28 கட்சிகளாக உயர்ந்தது.
ஆனால், இடையில் நடைபெற்ற 5 மாநில சட்டமன்ற தேர்தல் தோல்விகள், பிரதமர் வேட்பாளர், தொகுதி பங்கீட்டில் உடன்பாடு இல்லை, அதிருப்தி, கருத்து வேறுபாடு உள்பட சில பிரச்சினைகளால், கட்சிகளுக்கு இடையே சலசலப்பு உருவானது. இதனால், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உருவாகிய இந்தியா கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது.
இதன் காரணமாக, கூட்டணி உருவாக காரணமாக இருந்த நிதிஷ்குமார் இந்தியா கூட்டணியில் இருந்து விலகி, மீண்டும் பாஜகவுடன் கைகோர்த்தார். அதைத்தொடர்ந்து, இந்தியா கூட்டணியில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மேற்குவங்கத்தில் தனித்துதான் போட்டியிடும் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்திருந்தார். அதுபோல, பஞ்சாபில் ஆம் ஆத்மி தனித்து போட்டியிடும் என்று அம்மாநில முதல்வர் அறிவித்தது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. இதற்கு அடுத்துதான் இந்தியா கூட்டணிக்கு பெரிய பின்னடைவு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து, இந்தியா கூட்டணியில் இருந்த ராஷ்டிரிய லோக் தள் கட்சியும் பாஜக தலைமையிலான கூட்டணிக்குப் போய்விட்டது. இந்த நிலையில், தற்போது ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி தனித்து போட்டியிடும் என்று அக்கட்சி தலைவர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். இதனால் இந்தியா கூட்டணி என்ற அமைப்பு லோக்சபா தேர்தல் வரை நீடிக்குமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பரூக் அப்துல்லா, நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் ஜம்மு காஷ்மீரில் உள்ள 5 தொகுதிகளிலும் தேசிய மாநாட்டு கட்சி தனித்து போட்டியிடும் என்று கூறியுள்ளார்.