ஜம்மு :
ஜம்மு- காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை கடந்த ஆகஸ்ட் மாதம், மத்திய அரசு ரத்து செய்தது.
இதன் தொடர்ச்சியாக தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெஹ்பூபா முப்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டு, காவலில் வைக்கப்பட்டனர்.
அண்மையில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் பரூக் அப்துல்லா, தனது மகன் உமருடன் நேற்று ஜம்மு பிராந்தியத்துக்கு சென்றார்.
ஒரு ஆண்டுக்கு பிறகு கட்சி தொண்டர்கள் மத்தியில் பேசிய பரூக் அப்துல்லா, “ஜம்மு பிராந்திய, மக்களுக்கும், லடாக் பிராந்திய மக்களுக்கும் பா.ஜ.க. பொய்யான வாக்குறுதிகளை தந்துள்ளது” என குற்றம் சாட்டினார்.
“காஷ்மீர் மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. அந்த அந்தஸ்து அவர்களுக்கு மீண்டும் கிடைக்கும் வரை என் உயிர் போகாது. என்னை நம்பியுள்ள மக்களுக்கு நான் ஏதாவது செய்தாக வேண்டும். எனது கடமையை செய்து முடித்த பின்னர் தான் எனது உயிர் இந்த உலகை விட்டு பிரியும்” என்று அவர் உணர்ச்சி பொங்க தெரிவித்தார்.
காஷ்மீரில் முதல்-அமைச்சராக இருந்த பரூக் அப்துல்லா, இப்போது ஸ்ரீநகர் தொகுதி மக்களவை உறுப்பினராக இருப்பது குறிப்பிடத்தக்கது.
– பா. பாரதி