காஷ்மீரில் 7 கட்சிகள் இணைந்த புதிய கூட்டணிக்கு பரூக் அப்துல்லா தலைவர்…
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரத்து செய்தது.
மேலும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கென இருந்த தனிக்கொடியும் விலக்கிக் கொள்ளப்பட்டது.
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டபோது, அங்குள்ள அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.
அவர்கள் ஒருவர் பின் ஒருவராக விடுதலை செய்யப்பட்டனர்.
இந்நிலையில் ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து கேட்டுப் போராட அந்த மாநிலத்தில் 7 பிரதான அரசியல் கட்சிகள் இணைந்து ‘மக்கள் கூட்டணி’’ என்ற பெயரில் புதிய அணியை நேற்று உருவாக்கின.
ஸ்ரீநகரில் உள்ள மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெஹ்பூபா முப்தி இல்லத்தில் நடந்த கூட்டத்தில், இந்த புதிய கூட்டணியின் தலைவராக தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா நியமிக்கப்பட்டார்.
இந்த கூட்டணியின் துணைத்தலைவராக மெஹ்பூபா முப்தியும்,செய்தி தொடர்பாளராக மக்கள் மாநாட்டுக் கட்சித் தலைவர் சஜத் கானி லோனும் நியமிக்கப்பட்டனர்.
அப்போது செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த பரூக் அப்துல்லா’’ எங்கள் அணியைத் தேச விரோத அணி என பா.ஜ.க. பொய் பிரச்சாரம் செய்கிறது. இந்த அணி பா.ஜ.க.வுக்கு எதிரான அணி என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் நாட்டுக்கு எதிரான அணி அல்ல’’ என்று தெரிவித்தார்.
-பா.பாரதி.