அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை அடுத்து தமிழக விவசாயிகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெளிநாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்யப்படுவதை தடை செய்து மத்திய அரசு கடந்த வாரம் உத்தரவிட்டது. இதனால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் உள்ள அரிசி நுகர்வோர் பீதியடைந்தனர்.
இந்தியாவில் இருந்து அமெரிக்காவை விட நேபாள், ஐக்கிய அரபு நாடுகள் உள்ளிட்ட பிற நாடுகளுக்கு அதிகளவில் அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மற்றும் களம்பூர் ஆகிய இடங்களில் உள்ள சுமார் 80க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகளில் இருந்து தென் இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மட்டுமன்றி சிங்கப்பூர், மலேசியா, வளைகுடா நாடுகள் மற்றும் தென் ஆப்ரிக்க நாடுகளுக்கும் அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
இம்மாவட்டத்தின் பெரும்பாலான விவசாயிகள் பொன்னி, பிபிடி, பிடிடி, சோனா டீலக்ஸ் போன்ற அரிசி ரகங்களை பயிரிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த திடீர் தடை காரணமாக அரிசி ஆலைகளில் ஏராளமான நெல் மற்றும் அரிசி மூட்டைகள் தேக்கமடைந்துள்ளன. இதனால் ஆலை உரிமையாளர்களுக்கு ஒரே வாரத்தில் 5 % நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் அரிசி தேவை காரணமாக அறுவடை செய்யப்பட்ட உடன் நேரடியாக களத்தில் இருந்தே நெல் மூட்டைகளை வாங்க ஏதுவாக நெல்லின் ஈரப்பத சதவீதம் அதிகரிக்கப்பட்டது.
ஆனால், தடை காரணமாக அரிசி மற்றும் நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளதை அடுத்து அதை சேமிக்க தேவையான கிடங்குகள் இல்லாமல் ஆலை உரிமையாளர்களும் விவசாயிகளும் தற்போது அவதிப்பட்டு வருகின்றனர்.
இதனால் அடுத்த அறுவடை பருவத்தில் நெல் விலை வீழ்ச்சி அடையும் என்று கூறப்படுவதுடன் இடைத்தரகர்களும் நெல் கொள்முதலில் அதிக ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது.
ஆரணி, களம்பூர், தியாகதுர்கம் என அரிசி வியாபாரத்தில் சிறந்து விளங்கும் தமிழ் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் இதேபோன்ற நிலை ஏற்பட்டுள்ளதை அடுத்து மத்திய அரசின் இந்த திடீர் முடிவால் தமிழகத்தின் நெல் விவசாயிகள் அனைவரும் வேதனையில் மூழ்கியுள்ளனர்.
அதேவேளையில், இடைத்தரகள் மூலம் கடந்த மாதம் 2400 ரூபாய்க்கு வாங்கப்பட்ட ஒரு மூட்டை பொன்னி நெல் கடந்த வாரம் ரூ. 2700 வரை அதிகரித்து உள்ளூர் சந்தையில் அரிசி விலை கிடுகிடுவென உயர்ந்தது.
இந்த நிலையில், ஏற்றுமதி தடையால் ஆலைகளில் அரிசி மூட்டை தேக்கமடைந்துள்ளதை அடுத்து வழக்கமாக 100 மூட்டைகளை வாங்கிச் செல்லும் இடைத்தரகர்கள் தற்போது சொற்ப எண்ணிக்கையிலான நெல் மூட்டைகளையே வாங்கிச் செல்வதால் உள்ளூர் சந்தையில் அரிசி விலை கட்டுக்குள் வரும் என்று கூறப்படுகிறது.