பெங்களூரு :
கர்நாடக மாநிலத்தில் பி.எஸ்.எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியில் உள்ளது.
இவரது மந்திரி சபையில் வேளாண்மை துறை அமைச்சராக இருக்கும் பி.சி.பட்டீல் கொடகு மாவட்டம் பொன்னம்மாபேட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் “தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகள் அனைவரும் கோழைகளே” என தெரிவித்தார்.
“மனைவி மற்றும் பிள்ளைகள் இருப்பதை மனதில் கொள்ளாமல் தற்கொலை செய்து கொள்வோரை கோழைகள் என்று தான் சொல்ல வேண்டும்” என குறிப்பிட்ட அமைச்சர் “தண்ணீரில் விழுந்து விட்டால் நீச்சல் அடித்து நாம் கரை சேர்வது இல்லையா ? அதுபோல் பிரச்சினைகள் இருந்தால் அதில் இருந்து மீண்டு வரவேண்டுமே தவிர தற்கொலை செய்து கொள்ளக்கூடாது” என அவர் அறிவுறுத்தினார்.
அமைச்சரின் இந்த கருத்துக்கு கர்நாடக மாநில எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
கர்நாடக மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் வி.எஸ்.உக்ரப்பா அளித்துள்ள பேட்டியில் “அமைச்சர் பட்டீல் இங்குள்ள விவசாயிகளை அவமானப்படுத்தி விட்டார்” என குற்றம் சாட்டினார்.
“தற்கொலைக்கான காரணத்தை ஆராய்ந்து தீர்வு காண்பதற்கு பதிலாக கோழைகள் என விவசாயிகளை சொல்லி இருப்பதை ஏற்க முடியாது” என குறிப்பிட்ட உக்ரப்பா “இப்படி ஒரு கருத்தை தெரிவித்த அமைச்சர் பட்டீல் விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” என வலியுறுத்தினார்.
– பா. பாரதி