டெல்லி: தலைநகரில் டிராக்டர் பேரணி நடத்தி வரும் விவசாயிகள், அங்கு காவல்துறையினரின் தடுப்பை மீறி டெல்லிக்குள் புகுந்துள்ளனர். அங்கு செங்கோட்டையில் உள்ள கொடிக்கம்பத்தில் விவசாய சங்க கொடியை ஏற்றினர். இதனால் பரபரப்பு நிலவி வருகிறது.
விவசாயிகளின் டிராக்டர் பேரணி இன்று காவல்துறையினரின் அறிவிப்பை மீறி நடைபெற்று வருகிறது. காவல்துறை அமைத்தது, தடுப்புகளை உடைத்து, காவல்துறை வீரர்களை தாக்கியும், காவல் துறை வாகனங்களை சூறையாடிவிட்டு, முன்னேறிய விவசாயிகள் மீது, தடியடி, கண்ணீர் புகைக்குண்டு வீச்சு போன்ற சம்பவங்கள் நடைபெற்றுள்னன.
சிங்கு மற்றும் காசிப்பூரில் வன்முறையில் ஈடுபட்ட விவசாயிகள் மீது காவல்துறையினர் லத்திசார்ஜ், கண்ணீர்ப்புகை குண்டுகளை பயன்படுத்தினர். அதேபோல, முபாரக் சவுக் பகுதியில் விவசாயிகள் ஏராளமானோர் கூடினர். அங்கு போலீஸார் அமைத்திருந்த தடுப்புகளை உடைத்து, போலீஸார் வாகனங்களில் மீது ஏறிச் செல்ல முயன்றனர். இதைத் தடுக்கும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டபோது, விவசாயிகளுக்கும், போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
கூட்டத்தினரைக் கலைக்க போலீஸார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசிக் கலைத்தனர். மத்திய டெல்லி பகுதிக்குள் நுழைவோம் என விவசாயிகளில் ஒரு தரப்பினர் தொடர்ந்து போலீஸாருடன் தகராறில் ஈடுபட்டு வருகின்றனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்லி ஐடிஓ பகுதிக்குள் விவசாயிகளில் ஒருதரப்பினர் நுழைய முயன்றனர். அவர்கள் மீது போலீஸார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசி, தடியடி நடத்தி விரட்டினர். நாங்கோலி சவுக், முபாரக் சவுக் பகுதியில் போலீஸாரின் தடுப்புகளை உடைத்து, விவசாயிகள் நுழைந்தனர். டெல்லி ஐடிஓ, போலீஸ் குடியிருப்புப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த போலீஸார் வாகனங்கள், அரசுப் பேருந்துகள் மீது விவசாயிகளில் ஒரு தரப்பினர் கல்வீசித் தாக்குதல் நடத்தி, சேதப்படுத்தினர்.
விவசாயிகள் போராட்டத்தில் ஒரு பிரிவினர் வன்முறையில் ஈடுபட்டு வருவதால், டெல்லியில் உள்ள பல்வேறு மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டன. சமய்பூர் பாத்லி, ரோஹினி செக்டார், ஹெய்த்பூர் பத்லி, ஜஹாங்கிர் புரி, ஆதர்ஷ் நகர், ஆசாத்பூர், மாடல்டவுன், ஜிடிபி நகர், விஸ்வா வித்யாலயா, விதான் சபா, சிவில்லைன் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டன. பச்சை வழித்தடத்தில் உள்ள லால் குவில்லா, இந்திர பிரஸ்தா, ஐடிஓ ரயில் நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டன. போராட்டம் வன்முறைக்களமாக மாறி வருவதால், தலைநகரில் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் சிங்கு எல்லையில் இருந்து டெல்லிக்குள் புகுந்து செங்கோட்டை நோக்கி சென்ற விவசாயகிளின் டியரசு தின விழா முடிந்த சில நிமிடங்களில் செங்கோட்டைக்குள் நுழைந்தது. போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள் செங்கோட்டையை முற்றுகையிட்டனர். மேலும் டெல்லியில் உள்ள காவல் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தடுப்புகளை மீறி செங்கோட்டைக்குள் ஆயிரக்கணக்கான விவசாயிகள் புகுந்துள்ளனர். டெல்லி செங்கோட்டையில் விவசாய சங்க கொடியை விவசாயிகள் ஏற்றியுள்ளனர். இது வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாகக் கருதப்படுகிறது. மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.