பாட்னா

பாட்னாவில் வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடும் விவசாயிகள் மீது காவல்துறை தடியடி நடத்தி உள்ளது.

நாடெங்கும் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.  டில்லியில் தொடர்ந்து 34 நாட்களாக விவசாயிகள் போராடி வருகின்றனர்.  அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாடெங்கும் உள்ள பல மாநில விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.   அவ்வகையில் பீகாரிலும் போராட்டம் நடந்து வருகிறது.

பீகாரில் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி விவசாய அமைப்பினரும் இடது சாரிகளும் இணைந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.  இதன் ஒரு பகுதியாக பீகார் மாநில தலைநகரம் பாட்னாவில் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியில் போராட்டக்காரர்கள் ஈடுபட்டனர்.  இந்த பேரணிக்கு அரசு சார்பில் தடை விதிக்கப்பட்டது.  ஆளுநர் மாளிகை அருகே காவல் அதிகரிக்கப்பட்டது.

இதையொட்டி போராட்டம் செய்வோரைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.  அதன்படி பீகார் மாநில காவல்துறையினர் தடியடி தாக்குதல் நடத்தி உள்ளனர்.  இந்த தாக்குதலில் ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.  காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  தற்போது ஆளுநர் மாளிகையில் காவல் அதிகரிக்கப்பட்டுள்ளது..