கூடலூர்

கேரள அமைப்புக்களின் முல்லைப் பெரியாறு அணை குறித்த பொய் பிரசாரத்தை எதிர்த்து தமிழக விவசாயிகள் மறியல் செய்துள்ளனர்.

கேரளாவில் முல்லைப் பெரியாறு அணையை அகற்றி அதற்கு மாறாக புதிய அணை கட்ட வேண்டும் என வலியுறுத்தி கேரளாவில் பல அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.   இத்தகையை பொய்ப் பிரசாரங்களுக்குத் தமிழகத்தில் குறிப்பாக விவசாயிகளிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இதையொட்டி 5 மாவட்ட விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்தோர் தமிழக கேரள எல்லையில் மறியல் செய்தனர்.  இவர்கள் லோயர் கேம்பில் இருந்து குமுளிக்குப் பேரணியாகச் சென்றபோது காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.  இதையொட்டி லோயர்  கேம்பில் உள்ள பென்னி குவிக் மண்டபம் அருகே விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதையொட்டி உத்தம பாளையம் வட்டாட்சியர் அர்ஜுனன், துணை வட்டாட்சியர் சுருளி ஆகியோர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.  பெரியாறு அணைக்கு எதிராகக் கேரளாவில் விஷமப் பிரச்சாரம் நடக்கிறது எனவும் இதுபோன்ற செயலில் ஈடுபடுவோரைக் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். எனவும் பேபி அணையைப் பலப்படுத்துவதற்கு ஏதுவாக அங்குள்ள மரங்களை அகற்ற அனுமதிக்க வேண்டும் எனக் கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

அதிகாரிகள் தேனி மாவட்ட ஆட்சியர் மூலமாக அரசின் கவனத்துக்கு இவற்றைக் கொண்டு செல்வதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்.   அதை ஏற்ற விவசாயிகள் கலைந்து சென்றுள்ளனர்.  இந்த விவசாயிகள் மறியல் போராட்டத்தால் தமிழக கேரள எல்லையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.