விவசாயிகள் ஏன் மீண்டும் மீண்டும் போராட்டத்திற்கு தள்ளப்படுகிறார்கள்? விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை ஏன் நிறைவேற்றவில்லை என்று துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் கேள்வியெழுப்பியுள்ளார்.
விவசாயத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகானை சாடிய துணை ஜனாதிபதியும் மாநிலங்களவை சபாநாயகருமான ஜக்தீப் தன்கர், விவசாயிகள் போராட்டத்தை உடனே முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்றும் MSP உத்தரவாதச் சட்டம் தேவை என்றும் வலியுறுத்தினார்.
இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஏஆர்) போன்ற முக்கிய நிறுவனங்கள் இருந்தாலும் விவசாயிகள் சிரமத்தில் உள்ளதாக துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் குற்றம்சாட்டினார்.
இந்தியா வளர்ந்த நாடு என்ற அந்தஸ்தைப் பெற வேண்டுமானால், ஒவ்வொருவரின் வருமானத்தையும் எட்டு மடங்கு உயர்த்த வேண்டும் என்றார். அந்த எட்டு மடங்கு அதிகரிப்புக்கு மிகப்பெரிய பங்களிப்பு கிராமப்புற பொருளாதாரம் மற்றும் விவசாயிகள் நலன்.
ஆனால் விவசாயிகள் தங்கள் பயிறுக்கான குறைந்தபட்ச ஆதார விலைக்கே போராட்டம் நடத்த வேண்டிய நிலையில் உள்ளனர் என்று வேதனை தெரிவித்தார்.
இன்று விவசாயிகள் போராட்டம் நடத்துகிறார்கள் அதை குறைவாக மதிப்பிடுவது தவறான புரிதலுடன் கூடிய மாபெரும் தவறாகும் என்று பேசினார்.
விவசாயிகளின் போராட்டத்தை மட்டுப்படுத்துவதால் அவர்கள் சோர்வடைந்து சென்றுவிடுவார்கள் என்ற எண்ணம் தவறானது. இந்தியாவின் ஆன்மா கலங்கக்கூடாது, இதயம் புண்படக்கூடாது என்ற ஜக்தீப் தன்கர் விவசாயியுடன் பேச்சுவார்த்தை நடத்தாதது ஏன் என்று புரியவில்லை என்று கூறினார்.
விவசாயிகள் போராட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் குடியரசு துணை தலைவர் ஜக்தீப் தன்கரின் இந்த பேச்சு ஆளும்கட்சியினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.