டில்லி

விவசாயிகள் போராட்டத்தை இடதுசாரி தீவிரவாதிகள் பயன்படுத்துவதாக பாஜக அரசு குற்றம்  சாட்டி உள்ளது.

பாஜக அரசு அறிமுகம் செய்துள்ள வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி நாடெங்கும் எதிர்ப்பு எழுந்துள்ளது.  இதையொட்டி பஞ்சாப், அரியான  உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தோர் டில்லியில் தொடர்ந்து 16 நாட்களாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  இவர்களது  போராட்டம் எல்லைகளில் நடப்பதால் அண்டை மாநில போக்குவரத்து முடங்கி உள்ளதாக அரசு குற்றம் சாட்டி உள்ளது.,

மத்திய அரசு நடத்திய பேச்சு வார்த்தையின் போது ஒரு சில பரிந்துரைகள் கொண்ட அறிக்கையை விவசாயிகள் பிரதிநிதிக்கு  அளிக்கப்பட்டது.,  இந்த பரிந்துரைகளை ஏற்க மறுத்த விவசாயிகள் சட்டத்தை திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் எனவும் டில்லி செல்லும் சாலைகளை மூடி ரயில் மறியல் செய்து போராட்டத்தைத் தீவிரப்படுத்தத் தீர்மானம் செய்துள்ளனர்.

இந்நிலையில் எல்லையில் போராட்டம் நடத்தும் ஒரு சிலர் மனித உரிமைகள் தினத்தையொட்டிய கோரிக்கைகள் கொண்ட அட்டைகளை ஏந்தி இருந்தனர்.  இவற்றில் பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் கைது செய்யப்பட்டுள்ள சமூக ஆர்வலர்களை விடுவிக்கக் கோரிக்கை எழுப்பப்பட்டிருந்தது.  இதைச் சுட்டிக்காட்டிய மத்திய அரசு சமூக விரோதிகள் இந்த போராட்டத்தைப் பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டி உள்ளது.

இது குறித்து மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், “சில சமூக விரோதிகள் விவசாயிகள் என்ற போர்வையில் விவசாயிகளின் போராட்ட சூழலைக் கெடுக்க முயல்கின்றனர். ஆகவே அத்தகைய சமூக விரோதிகள் உங்களின் போராட்டக்களத்தை பயன்படுத்த அனுமதிக்காதீர்கள் எனவும், இந்த விவகாரத்தில் விழிப்புடன் இருக்குமாறும் விவசாய சகோதரர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.

மத்திய அரசு விவசாயிகளின் இந்த போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரவும், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் தயாராக உள்ளது. போராடி வரும் விவசாயிகளின் கவலைகளைப் போக்கும் வகையில் யோசனைகள் அடங்கிய திட்டம் ஒன்று அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. மேற்கொண்டு பேச்சுவார்த்தைகளுக்கும் அரசு தயாராக இருக்கிறது.” எனத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து விவசாயிகள் செய்தியாளர்களிடம், “எவ்வித அரசியல் சார்பும் இன்றி எங்கள் போராட்டம் நடைபெறுகிறது.  இந்த போராட்டக்களைத்தை பயன்படுத்த எண்ணும் பல அரசியல் தலைவர்களுக்கும் மறுப்பு தெரிவித்துள்ளனர்.   விவசாயிகள் சிலர் மனித உரிமை தினத்தை அனுசரிக்க அந்த அட்டைகளை வைத்து இருக்கலாம்” எனத் தெரிவித்துள்ளனர்.