டெல்லி: விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.  விவசாயிகளுடன் மத்தியஅரசு நேற்று நடத்திய 3வது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்து உள்ளது. மத்தியஅரசின் உத்தரவாதங்களை ஏற்க முடியாது என்று விவசாயிகள் முரண்டு பிடிப்பதாக கூறப்படுகிறது. விவசாயிகளின் போராட்டம் காரணம், டெல்லி உள்பட அண்டை மாநில பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதாய விலையை உறுதி செய்தல் தொடர்பான சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் டெல்லியில் பேரணி நடத்த முடிவு செய்தனர். விவசாயிகளின் கோரிக்கைகளில் கடன் தள்ளுபடி, நவம்பர் 2020 முதல் டிசம்பர் 2021 வரை டெல்லியில் 13 மாதங்கள் நீடித்த விவசாயிகள் போராட்டத்தில் இறந்தவர்களின் உறவினர்களுக்கு வேலை, அக்டோபர் 2021 இல் லக்கிம்பூர் கெரியில் காயமடைந்த விவசாயிகளுக்கு இழப்பீடு மற்றும் வழக்குகளை திரும்பப் பெறுதல் ஆகியவை அடங்கும்.

தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி  விவசாயிகள் கடந்த 13-ந்தேதி (திங்கட்கிழமை) அரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து புறப்பட்டனர். ஆனால் அரியானா மாநில அரசு விவசாயிகள் எல்லையை கடந்து செல்ல முடியாத வகையில் தடுப்புகளை அமைத்து விவசாயிகளை தடுத்து வருகிறது.

பஞ்சாப்- அரியானா எல்லையில் விவசாயிகள் போராட்ட நடத்திய நிலையில் டிரோன் மூலம் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி விவசாயிகளை விரட்டி அடித்தனர். இதையடத்து,  இன்று நாடு தழுவிய போராட்டத்திற்கு விவசாயிகள் சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.

ஒரு பக்கம் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் மறுபக்கம் மத்திய அரசு விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மூன்று மத்திய அமைச்சர்கள் இந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்கள். ஏற்கனவே இரண்டு முறை (பிப்ரவரி 8-ந்தேதி மற்றும் பிப்ரவரி 12-ந்தேதி) பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இரண்டு முறையும் உடன்பாடு எட்டப்படவில்லை. இந்த நிலையில்தான் நேற்று 3-ம் கட்ட பேச்சுவார்த்தை அரியானாவில் நடைபெற்றது. இரவு வரை நீடித்த இந்த பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டப்படவில்லை.

இதனால் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை வருகிற 18-ந்தேதி (நாளைமறுநாள்) நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.