டெல்லி: வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாய அமைப்புகளின் டெல்லி சலோ போராட்டம் இன்று 30வது நாளை எட்டியுள்ளது. இந்த நிலையில், விவசாய சங்கங்கள் பேச்சுவார்த்தைக்கு வருமாறு மத்தியஅரசு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது.
மோடி தலைமையிரான மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்கங்கள் விவசாயிகளுக்கு எதிரானதாக இருப்பதாக கூறி, அதை திரும்பப் பெற வேண்டும் என விவசாயிகள் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். வடமாநில விவசாயிகள் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டம் தொடர்பாக மத்திய அரசு நடத்திய விவசாய அமைப்புகளுன் 5 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. இதில், சுமூக முடிவு எட்டப்படவில்லை. வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்பதுடன் வேறு எந்த திருத்தங்களையும் ஏற்க முடியாது என பிடிவாதமாக உள்ளன. கடும் குளிரிலும் போராட்டம் இன்று 30வது நாளாக தொடர்ந்து வருகிறது.
இதையடுத்து 6-வது கட்ட பேச்சுவார்த்தைக்கு வருமாறு விவசாய சங்கங்களுக்கு மத்திய அரசு சார்பில் கடந்த திங்கள்கிழமை கடிதம் எழுதப்பட்டது. ஆனால், அந்த கடிதத்திலும் ஏதும் இல்லை என கூறி விவசாயிகள் அதனை நிராகரித்து விட்டனர்.
இந்த நிலையில், விவசாய சங்கங்களுக்கு மத்திய வேளாண் துறை அமைச்சகம் சார்பில் மீண்டும் கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதில், “விவசாயிகள் எழுப்பும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசு உறுதிபூண்டுள்ளது. இதற்காக அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு அரசு தயாராக உள்ளது. எனவே, விவசாய சங்கங்கள் பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.
ஆனால், ஏற்க மறுத்துள்ள விவசாய அமைப்புகள், குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கும் மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தால் மட்டுமே அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு வருவோம் என்று தெரிவித்துள்ளனர்.