சென்னை: ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தின் கடைசி நாளும், பொங்கல் தினத்திற்கு முந்திய நாள் போகிப் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
ஆனால், இன்றைய போகியின் போது பல பகுதிகளில் விவசாயிகள் வேளாண் சட்டங்களின் நகல்களை எரித்தனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது.
போகி பண்டிகையையொட்டி, இன்று அதிகாலை முதல் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில், பொதுமக்கள் தங்களது வீட்டு வாசலில், பழைய தேவையற்ற பொருட்களை எரித்தனர். இதனால், பல இடங்களில் புகை மூட்டம் ஏற்பட்டது. இதனால், வாகனத்தில் செல்வோர் அவதிப்பட்டனர்.
இந்த நிலையில், மத்தியஅரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் போராடி வருகின்றனர். வடமாநில விவசாயிகள் டெல்லியில் கடந்த 50 நாட்களாக முகாமிட்டு போராடி வருகின்றனர். ஆனால், மத்தியஅரசு வேளாண் சட்டங்களை திரும்பபெற முடியாது என்று தெரிவித்து உள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தின் பல பகுதிகளில், விவசாயிகள், அரசியல் கட்சியின் போகியின்போது, வேளாண் சட்ட நகலை எரித்து போகி பண்டிகை கொண்டாடினர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் வேளாண் சட்ட நகலை எரித்து விவசாயிகள் போகி பண்டிகையை கொண்டாடினார்கள். வாலாஜாபாத் உத்திரமேரூர் ஆகிய பகுதிகளில் சட்ட நகல்களை எரித்து மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel