டில்லி

டில்லியில் குடியரசு தினத்தன்று விவசாயிகள் சார்பில் 2 லட்சம் டிராக்டர்கள் பங்கு பெறும் பேரணி நிச்சயம் நடக்கும் என விவசாய அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

சமீபத்தில் மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களுக்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.   இந்த சட்டங்களைத் திரும்பப் பெற டில்லியில் பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த நவம்பர் 28 ஆம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  மத்திய அரசு நடத்திய 11 கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்ததால் போராட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது.

தங்கள் கோரிக்கையை முன்னிறுத்தி வரும் குடியரசு தினத்தன்று டில்லியில் டிராக்டரக்ள் பேரணியை நடத்த விவசாயச் சங்கங்கள் முடிவெடுத்தன.,  இந்த பேரணியைக் கைவிட அரசு கேட்டுக் கொண்டது.  இதையொட்டி விவசாய அமைப்பு நிர்வாகிகள் நேற்று 3 மணி நேரம் ஆலோசனை நடத்தினர்.  அதன்பிறகு குடியரசு தின அணிவகுப்புக்கள் நடந்து முடிந்த பிறகு சுமார் 2 லட்சம் டிராக்டர்கள் பங்குபெறும் பேரணி நிச்சயம் நடக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

இந்த பேரணியை திட்டமிட்டபடி நடத்த விவசாயிகள் சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.  வாகனத்தை ஒழுங்கு படுத்த 2500 தன்னார்வலர்கள் பணியில் ஈடுபட உள்ளனர்.   அத்துடன் காஜிபூர், சிங்கு, திக்ரி ஆகிய டில்லி நகர எல்லைகளில் இருந்து டிராகடர்கள் பேரணியாக டில்லி வர உள்ளன.   இந்த பேரணியின் வழித்த்டம் குறித்து எழுத்துப் பூர்வமாக மனு அளிக்கப்பட்டால் பரிசீலிக்கப்படும் என டில்லி காவல்துறை அறிவித்துள்ளது.