டெல்லி: மக்களவை எதிர்க்கட்சி தலைவராக உள்ள ராகுல் காந்தியுடன் இன்று காலை விவசாய சங்க தலைவர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் சந்திக்க இருந்த நிலையில், அதற்கு நாடாளுமன்ற தலைவர் அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கு ராகுல்காந்தி கடும்க ண்டனம் தெரிவித்த நிலையில் தற்போது அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து க 12 பேர் கொண்ட விவசாயத் தலைவர்கள் குழு நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள ராகுல் காந்தியின் அலுவலகத்துக்குச் சென்றது. விவசாய சங்க தலைவர்களுடன் ராகுல்காந்தி ஆலோசனை நடத்தி வருகிறார்.
விவசாய சங்க தலைவர்கள் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை இன்று காலை 11மணி அளவில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள ராகுல் காந்தியின் அலுவலகத்தில் சந்திக்க இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதன்படி, 7 விவசாய சங்கங்களின் தலைவர்கள் ராகுல் காந்தியை சந்தித்து பேசுவார்கள் என்றும், அப்போது, விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்ற தனிநபர் மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்யுமாறு ராகுல் காந்தியை வலியுறுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இதுதொடர்பாக நேற்று முன்தினம் (திங்கள்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த சம்யுக்த் கிசான் மோர்ச்சா மற்றும் கிசான் மஸ்தூர் மோர்ச்சா தலைவர்கள், நாடு முழுவதும் மோடியின் உருவ பொம்மை எரிக்கப்படும் என்றும் குறைந்தபட்ச ஆதார விலை உத்தரவாதத்தை சட்டப்பூர்வமாக்கும் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி புதிய போராட்டங்கள் நடத்தப் போவதாக அறிவித்தனர்.
நாடு முழுவதும் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ம் தேதி விவசாயிகள் டிராக்டர் பேரணியில் ஈடுபட உள்ளதாகவும், புதிய குற்றவியல் சட்டங்களின் நகல்களை எரிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, உத்தரப் பிரதேசத்தில் செப்டம்பர் 1ஆம் தேதியும், ஹரியாணாவில் செப். 15 மற்றும் 22ஆம் தேதிகளில் மெகா பேரணி நடத்தவுள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.
ஏற்கனவே விவசாயிகள், கடந்த பிப்ரவரி மாதம் டெல்லி நோக்கி தொடங்கிய போராட்டம் ஹரியாணா எல்லைகளில் நிறுத்தப்பட்ட நிலையில் மீண்டும் போராட்டத்தை நடத்த உள்ளனர்.
இதற்கிடையில், விவசாய சங்க தலைவர்களை நாடாளுமன்ற வளாகத்தில் சந்திக்க ராகுல்காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து கூறிய காங்கிரஸ் எம்பியும், மக்களவை மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி, “நாங்கள் அவர்களை (விவசாயி தலைவர்களை) எங்களை சந்திக்க இங்கு அழைத்தோம். ஆனால் அவர்கள் அவர்களை இங்கு (நாடாளுமன்றத்தில்) அனுமதிக்கவில்லை. அவர்கள் விவசாயிகள் என்பதால், இதுவே காரணமாக இருக்கலாம். “…இதுதான் பிரச்சினை… நாம் என்ன செய்ய வேண்டும்?… இது தொழில்நுட்ப சிக்கலாகவும் இருக்கலாம்..” அவர்களை உள்ளே அனுமதிப்பதில்லை.” என குற்றம் சாட்டினார்.
இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், விவசாய சங்க தலைவர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் ராகுலை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விவசாயி தலைவர் கள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள எதிர்க்கட்சி தலைவரின் லோபி அலுவலகத்தில் சந்தித்து பேசுகின்றனர்.
அதன்படி, நாடு முழுவதும் உள்ள கிசான் மஸ்தூர் மோர்ச்சா மற்றும் சம்யுக்த் கிசான் மோர்ச்சா (அரசியல் சார்பற்ற) ஆகியவற்றின் கீழ் 12 விவசாயத் தலைவர்கள் அடங்கிய குழு இன்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசியது. இந்த சந்திப்பின்போது, காங்கிரஸ் எம்.பி.க்கள் கே.சி.வேணுகோபால், அமரீந்தர் சிங் ராஜா வார்ரிங், சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா, குர்ஜித் சிங் அவுஜ்லா, தரம்வீர் காந்தி, டாக்டர் அமர் சிங், தீபேந்தர் சிங் ஹூடா மற்றும் ஜெய் பிரகாஷ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.