சென்னை: சட்டப்பேரவையில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தில் பேசிய ஓபிஎஸ், தனது நிலை குறித்து பாட்டு பாடி புலம்பினார். இது அவையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

தமிழக சட்டப்பேரவையில் இன்று மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தனி  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானத்தின்மீது பேசிய   எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர் செல்வம், இது தொடர்பான வழக்கில் தீர்ப்பு வரும் வரை காத்திருக்க வேண்டும்.  வேளாண் சட்டம் மீதான சாதக பாதகங்களை அறிந்து மத்திய அரசிடம் எடுத்துரைக்கலாம்; பல்வேறு சந்தேகங்களுக்கு பதில் கிடைக்கும் வரை பொறுமை யாக இருந்து தீர்மானத்தை கொண்டு வரலாம் என கூறினார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய அவை முன்னவர் துரைமுருகன். வேளாண் சட்டத்தில் உள்ள பாதகங்கள் குறித்து குழந்தைக்கு கூட தெரியும்; ஆதரிக்கிறீர்களா? எதிர்க்கிறீர்களா? என கேள்வி விடுத்தார்.

அதைத்தொடர்ந்து பேசிய ஓபிஎஸ், கண்ணதாசன் பாடலை சுட்டிக்காட்டி, நதியினில் வெள்ளம்; கரையினில் நெருப்பு; இரண்டுக்கும் நடுவே இறைவனின் சிரிப்பு – இதுவே என் நிலை பாட்டுப்பாடினார்.

ஓபிஎஸ், தனது நிலை எவ்வளவு மோசமாக  இருக்கிறது என்பதை, பாடல் மூலம் அவையில் தெரிவித்து புலம்பிய செயல், எம்எல்ஏக்களிடையே அவர்மீதான பரிதாபத்தையும்,  சிரிப்பையும் வரழைத்தது.