சென்னை

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரபல யூடியுபர் சவுக்கு சங்கர் கடந்த மே மாதம் தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டியில் இருந்தபோது அவரது கார் மற்றும் உதவியாளரிடம் தடை செய்யப்பட்ட 2.5 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. எனவே சவுக்கு சங்கர், அவரது உதவியாளர் ராம் பிரபு, ராஜரத்தினம், மகேந்திரன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மதுரை மாவட்ட போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தபோது சவுக்கு சங்கர் ஆஜராகவில்லை. அவரது வழக்கறிஞர் அவர் ஆஜராகாததற்கான காரணம் குறித்து மனு அளித்தார். மனுவை நீதிபதி செங்கமலச்செல்வன் ஏற்க மறுத்ததோடு சவுக்கு சங்கருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து விசாரணையை 20-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

இன்று பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரை சென்னையில் வைத்து தேனி மாவட்ட காவல்துறையினர் மீண்டும் கைது செய்துள்ளனர். நீதிமன்றம் கஞ்சா வழக்கில் பிறப்பித்த பிடிவாரண்டு அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.