கொல்லம்
பிரபல மலையாள நடிகர் முகேஷ் கொல்லம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் போட்டியிடுகிறார்.
பிரபல மலையாள நடிகர் முகேஷ் தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். அவரை நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் கேரளாவின் ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கொல்லம் நாடாளுமன்ற தொகுதியில் களம் இறக்கி உள்ளது.
இன்று நடிகர் முகேஷ் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார் .இன்று காலை 11:30 மணியளவில் கொல்லம் சி.ஐ.டி.யு. அலுவலகத்திலிருந்து தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் புடை சூழ ஊர்வலமாகப் புறப்பட்ட முகேஷுக்கு, கொல்லம் மீனவர்கள் சங்கத்தின் சார்பாக டெபாசிட் தொகை வழங்கப்பட்டது.
முகேஷ் கொல்லம் மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான என் தேவி தாசன் முன்பு இரண்டு செட் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தார். அப்போது கேரள நிதி மந்திரி கே என் பாலகோபால் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
கொல்லம் தொகுதியில் கடந்த 2019 ஆம் ஆண்டு போட்டியிட்ட ஆர். எஸ் .பி .கட்சியைச் சேர்ந்த காங்கிரஸ் தலைமையிலான ஜனநாயக முன்னணி வேட்பாளர் என். கே . பிரேமச்சந்திரன் 4,99,677 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் .அவரை எதிர்த்து போட்டியிட்ட இடது முன்னணி வேட்பாளரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவருமான கே.என். பாலகோபால், 3 லட்சத்து 50 ஆயிரத்து 821 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.