டோக்யோ

ப்பானிய நாளிதழான தி ஜப்பான் டைம்ஸ் மோடி தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில்லை என குறிப்பிட்டுள்ளது.

ஜப்பான் நாட்டின் புகழ்பெற்ற மிகவும் பழமையான நாளிதழ் தி ஜப்பான் டைம்ஸ்.  இது 1897 முதல் இயங்கி வருகிறது. இதன் பதிப்பாளர் யுகிகொ ஒகசவாரா. ஜப்பான் நாட்டின் செய்திகள் மட்டும் இன்றி உலகத்தின் அனைத்து நிகழ்வுகளைப் பற்றிய செய்திகளையும் விசேஷ கட்டுரைகளையும் இந்த நாளிதழ் வெளியிட்டு வருகிறது.  சமீபத்தில் இந்தியப் பிரதமர் மோடி பற்றிய ஒரு நீண்ட கட்டுரையை வெளியிட்டிருந்தது.

அதன் சுருக்கம் பின் வருமாறு :

”இந்தியப் பிரதமர் மோடி, 2014 தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளில் இருந்து தற்போது அமெரிக்க பயணத்தில் கொடுத்த வாக்குதல் வரை எதையும் நிறைவேற்றுவதே இல்லை.  தேர்தல் நேரத்தில் அவர் இந்தியாவை வர்த்தக அரங்கில் முதல் நாடாக கொண்டு வருவதாக கூறினார்.  தற்போதைய அமெரிக்க பயணத்தின் போதும், இந்தியாவின் வர்த்தகங்களை ஊக்குவிக்க தமது அரசு 7000 சீர்திருத்தம் செய்ததாக கூறினார்.  ஆனால் உண்மையில் உலக வங்கியின் அறிக்கைப்படி வர்த்தகத்தில் இந்தியா 130/190 என்னும் தரத்தில் தான் உள்ளது,

காஷ்மீர் தீவிர வாதிகள் மீது “சர்ஜிகல் ஸ்டிரைக்” நடத்தி தீவிரவாத முகாம்கள் ஒழிக்கப் பட்டதாக கூறினார்.  இது போல பல தாக்குதல்காள் முந்தைய அரசிலும் விளம்பரமின்றி நடத்தப்பட்டு வந்ததை அவர் மறைத்து விட்டார்.

இதே சர்ஜிகல் ஸ்டிரைக்கை கருப்புப் பணத்துக்கு எதிராக நடத்துவதாகக் கூறி ரூ. 500 மற்றும் ரூ. 1000 நோட்டுக்களை செல்லாது என அறிவித்தார்.   ஆனால் அனைத்து நோட்டுகளும் வங்கியில் செலுத்தப்பட்டு கருப்புப் பணம் ஒழிப்பு என்பது நடைபெறாமலே போனது.  இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பணமின்றி தவித்தது மட்டுமே நடை பெற்றது.

நாட்டின் தொழில் துறை வளர்ச்சி அதிகரித்துள்ளதாக கூறப்பட்டது.  ஆனால் உண்மையில் இந்தியாவின் மிகப் பெரிய தொழிலான கட்டுமானத்துறை வளர்ச்சி அடைவதற்கு பதில் ஏற்கனவே இருந்த அளவை விட குறைந்துள்ளது.

முந்தைய காங்கிரஸ் அரசு கொண்டு வர முயன்ற ஜி எஸ் டி வரி விதிப்பை அப்போது பா ஜ க எதிர்த்தது.   ஆனால் அதே பா ஜ க கடந்த ஜூலை முதல் ஜி எஸ் டி வரிவிதிப்பை அமுலாக்கி உள்ளது.  ஜி எஸ் டி என்பது ஒரு முனை வரி என்ற வகையில் மிகவும் அருமையான திட்டம்.   ஆனால் போதிய கால அவகாசம் இருந்தும் வரி விகிதம் சரியாக வரையறுக்கப் படாததால் இன்றும் குழப்பம் நிலவுகிறது.  அதே போல வரி விகிதம் மாற்றி அமைப்பதும் தொடர்கதையாகி விட்டது.

முந்தைய காங்கிரஸ் அரசு தவறாக ஆட்சி செய்ததால்தான் பா ஜ க அரசை இந்திய மக்கள் மாற்றாக தேர்ந்தெடுத்துள்ளனர்.  ஆனால் இன்றும் முந்தைய காங்கிரஸ் செய்து வந்த தவறுகளையே இந்த அரசும் செய்து வருகிறது.  முந்தைய காங்கிரஸ் அரசு முழுக்க முழுக்க இந்திரா காந்தி குடும்பத்தையே முன் நிறுத்தியது என சொல்லப்பட்டது.  இப்போதைய அரசும் மோடியை மட்டுமே முன் நிறுத்தி வருகிறது.

மதக் கலவரங்களும், தற்போது இந்தியாவில் அதிகரித்து வருவதாக தகவல்கள் வருகின்றன.  இது மாட்டிறைச்சி தடையில் இருந்தே அதிகரித்து வருவதாக உலக நாடுகள் தெரிவிக்கின்றன.

ஆனால் தற்போதைய நிலையில் மோடியின் பா ஜ க அரசுக்கு சரியான மாற்று எதுவும் இந்திய மக்களிடம் இல்லை.  இதே நிலை தொடருமானால், நிச்சயம் இந்திய மக்கள் தாங்கள் வேண்டாம் எனக் கூறிய காங்கிரஸையே அரை மனதுடன் அரசுக்கட்டிலில் அமர வைத்து விடுவார்கள் எனவே தோன்றுகிறது.”

இவ்வாறு அந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.