மும்பை

மும்பை தூர்தர்ஷனில் புகழ் பெற்ற தொகுப்பாளினி கன்சன் நாத் காலையில் வாக்கிங் போகும் போது தென்னைமரம் விழுந்து மரணமடைந்தார்.

கன்சன் நாத் (வயது 58) மும்பை நகரில் வசித்து வருகிறார்.  இவர் தனது வீட்டின் அருகில் கடந்த வியாழன் அன்று நடை பயிற்சி மேற்கொள்ளும்போது தென்னை மரம் ஒன்று அவர் தலையில் விழுந்து படுகாயம் அடைந்தார்.  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று மரணம் அடைந்தார்.

அவர் மேல் மரம் விழுந்தது, பக்கத்து கடையில் வைக்கப்பட்டிருந்து சி சி டிவி கேமராவில் பதிவாகியது.  அது வெளியாகி வைரலாக எங்கும் பரவியது.  விழுந்த தென்னைமரத்தை அகற்ற வேண்டும் என ஏற்கனவே அந்த ஏரியாவாசிகள் மும்பை நகராட்சிக்கு மனு கொடுத்துள்ளனர்.  ஆனால் அவர்கள் ஒன்றும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இது பற்றி மும்பை நகராட்சியின் மேல் இறந்த கன்சன் நாத்தின் கணவர் ரஜத் நாத் போலீசில் புகார் அளித்துள்ளார்.  அதை வாங்க போலீஸ் மறுத்துவிட்டது.  அந்த மரம் உள்ள இடம் அவினாஷ் பால் என்பவருக்கு சொந்தமானது.  அவர் அந்த மரம் தனக்கு உபயோகம் இல்லை எனவும் அதனை வெட்ட ரூ. 1380 நகராட்சிக்கு கட்டணம் செலுத்தியதாகவும் சொல்லப்படுகிறது.  ஆனால் அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் தான் தனது மனைவியை தான் பறி கொடுத்ததாக ரஜத் கண்ணீருடன் தெரிவித்தார்.