மும்பை

முன்னாள் அமைசர் பாபா சித்திக்கொலைக்கு பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றுள்ளது.

மகாராஷ்டிரா உணவுத்துறை மற்றும் தொழிலாளர் நலத்துறை முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் நேற்று மாலை, மும்பை பாந்த்ரா கிழக்கு நிர்மல் நகர், கோல்கேட் மைதானத்திற்கு அருகில் உள்ள அவரது மகன் ஷீசான் சித்திக் எம்.எல்.ஏ. அலுவலகத்திற்கு சென்று இருந்தபோது அலுவலகம் அருகே பாபா சித்திக்கை பின்தொடர்ந்த 3 பேர் கொண்ட கும்பல் அவர் மீது 3 ரவுண்ட் துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பினர்.

பாபா சித்திக் குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்த தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மும்பை காவல்துறையினர் அவரை மீட்டு அருகே இருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பாபா சித்திக் படுகொலைக்கு பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் தலைமையிலான கும்பல் பொறுப்பேற்றுள்ளது. இந்த துப்பாக்கி சூடு நடந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, பிஷ்னோய் கும்பல் சமூக ஊடகத்தில் இத்தகவலை பதிவிட்டுள்ளது. தகவல் ஷிபு லோங்கர் என்ற பெயரிலான பேஸ்புக் கணக்குடன் இணைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த ஆண்டு தொடக்கத்தில்  ஷுபம் லோங்கர் சட்டவிரோதமாக ஆயுதங்களை வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்ட அவருக்கு லாரன்ஸ் பிஷ்னோய் நெட்வொர்க்குடன் வலுவான தொடர்புகள் இருப்பதாக நம்பப்படுகிறது.

பாபா சித்திக்கை கொல்வதற்காக அவரது அன்றாட நடவடிக்கைகளை கொலையாளிகள் பல மாதங்களாக கண்காணித்துஅவரது வீடு மற்றும் அலுவலகத்தை உளவு பார்த்துள்ளனர். சித்திக் கொலைக்காக ஒவ்வொருவருக்கும் தலா 50,000 ரூபாய் முன்பணமாக வழங்கப்பட்டதாகவும், படுகொலை செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் அவர்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

காவல்துறையின் தகவலின்படி, துப்பாக்கியுடன் வந்த மூன்று நபர்கள் இந்த கொலையில் ஈடுபட்டுள்ளனர். மூவரில், இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒருவர் அரியானாவைச் சேர்ந்த குர்மாயில் பல்ஜித் சிங் (வயது 23) மற்றொருவர் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தரம்ராஜ் காஷ்யப் (வயது 19). மூன்றாவது நபர் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த சிவ குமார் கவுதம் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த கொலைக்கு மூளையாக இருந்ததாக கூறப்படும் நான்காவது நபரும் தப்பி ஓடி உள்ளார். கொலையில் தொடர்புடைய நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.