சென்னை:
பிரபல நடன இயக்குநர் சிவசங்கர் காலமானார். அவருக்கு வயது 73.
மூத்த நடன இயக்குநர் சிவசங்கர் மாஸ்டர் கொரோனா பாதிப்பால் ஆபத்தான நிலையிலிருந்து வருகிறார்.  இவருக்கு அதிக செலவு கொண்ட சிகிச்சை அளிக்க வேண்டியிருந்தது. இந்த சிகிச்சைக்கான கட்டணத்தை அவரது குடும்பத்தினரால் செலுத்த முடியவில்லை.
இந்நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள எனது அப்பாவுக்கு உதவுங்கள் என்று மூத்த நடன இயக்குநர் சிவசங்கர் மாஸ்டர் மகன் அஜய் கிருஷ்ணா வேண்டுகோள் விடுத்து இருந்தார்.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல நடன இயக்குநர் சிவசங்கர் இன்று சிகிச்சை பலனின்றி காலமானார்.

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடன இயக்குநராக வலம் வந்தவர் சிவசங்கர். ‘திருடா திருடி’, ‘மகதீரா’, ‘பாகுபலி’ உள்ளிட்ட படங்களில் நடன இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். ‘மகதீரா’ படத்தில் ஒரு பாடலுக்காக இவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. இது தவிர ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’, ‘தில்லுக்கு துட்டு’, ‘தானா சேர்ந்த கூட்டம்’ உள்ளிட்ட படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

பிரபல நடன இயக்குநர் சிவசங்கர் மறைவுக்கு திரையுலகத்தினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.