மும்பை:
கொரோனா தொற்று இந்திய மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ள நிலையில், கொரோனா தொற்று முத்திரை குத்தப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர், சக பயணிகளால் ரயிலில் இருந்து கீழே இறக்கி விடப்பட்ட கொடுமை மும்பையில் நிகழ்ந்துள்ளது…. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏற்கனவே பள்ளி, கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், மக்கள் கூடும் இடங்களுக்கு பொதுமக்கள் செல்வதை தடுக்கும் வகையில் மால்கள், சினிமா தியேட்டர்கள் மட்டுமின்றி சுற்றுலா ஸ்தலங்களுக்கும் விடுமுறை விடப்பட்டு உள்ளது.
இருந்தாலும் கொரோனா தொற்று பரவுவது அதிகரித்து வருகிறது. இந்தியாவில், மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிக அளவிலான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 42 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், இன்று, கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4 பயணிகள் மும்பையில் இருந்து டெல்லிக்கு செல்லும் கரிப் ராத் எக்ஸ்பிரஸ் ரயிலில் சூரத்துக்கு பயணம் செய்துள்ளனர். அவர்களின் கைகளில் கொரோ தொற்று குறித்த முத்திரை குத்தப்பட்டிருந்தது.
இதை அடையாளம் கண்ட மற்ற பயணிகள், அவர்களை ரயிலை விட்டு கீழே இறங்குமாறு தகராறில் ஈடுபட்டு, ரயில் பெட்டியில் அதகளம் செய்துள்ளனர். அதையடுத்து வந்த மகாராஷ்டிராவின் பால்கர் சந்திப்பு பகுதியில் உள்ள ரயில் நிலையத்தில், ரயிலை நிறுத்தி, வலுக்கட்டாயமாக நான்கு பயணிகளையும் கீழே இறக்கி விட்டுள்ளனர்.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. கொரோனா குறித்த அச்சம் பொதுமக்கள் மத்தியில் எந்தளவுக்கு பயத்தையும், பிதியையும் ஏற்படுத்தி இருக்கிறது என்பது சான்றுதான் இந்த சம்பவம்…..
ரயிலில் வலுக்கட்டாயமாக இறக்கப்பட்ட பயணிகள் சுகாதாரத் துறை குழுவினர் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அதைத்தொடர்ந்து, அவர்கள் ஒரு தனியார் வாகனம் மூலம் அவர்களை அவர்கள் சொந்த இடத்திற்கு அனுப்பியதாக கூறப்படுகிறது.