ண்டன்

காண்டா மிருகங்களை வேட்டையில் இருந்து காக்க ஆராய்ச்சியாளர்கள் போலி கொம்பை உருவாக்கி உள்ளனர்.

உலகின் மிகப்பெரிய மிருகங்களில் ஒன்றான காண்டாமிருகம் சீன நாட்டில் மருத்துவக் காரணங்களுக்காக வேட்டையாடப்படுகிறது.   அத்துடன் வியட்நாம் நாட்டில் பல செல்வந்தர்கள் தங்கள் இல்லங்களில் காண்டாமிருக கொம்பை அழகுப் பொருளாகவும் காட்சிப் பொருளாகவும் வைத்துக் கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.  இதனால் இந்த மிருகத்தை வேட்டையாடுவது அதிகரித்து வருகிறது.

இந்த வேட்டையால் காண்டாமிருகங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது.   எனவே காண்டாமிருகங்களை வேட்டையில் இருந்து காக்க ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் மற்றும் சீனாவின் ஃபூடன் பல்கலைக்கழகம் இணைந்து போலி காண்டாமிருகக் கொம்பு ஒன்றை உருவாக்கும் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.

காண்டாமிருகத்தின் கொம்பு மாட்டுக் கொம்பைப்போல இருக்காது.   அது காண்டாமிருகத்தின் முடிகளைக் கொண்டு உருவானது.

எனவே குதிரை முடியைக் கொண்டு இந்த போலி காண்டாமிருகக் கொம்பை ஆராய்ச்சியாளர்கள் அமைத்துள்ளனர்.   இந்த கொம்பை வெட்டிப் பார்த்தாலும் உள் அமைப்பு உண்மையான கொம்பு போல் இருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.   இது மிகவும் மலிவானதாக இருப்பதால் காண்டாமிருகம் கொம்புகளுக்காக வேட்டையாடப்படுவது குறையும் என அவர்கள் தெரிவித்தனர்.

ஆனால் சர்வதேச காண்டாமிருக காப்பு மைய துணை இயக்குநர் ஜான் டைலர், “இவ்வாறு மலிவான விலையில் கொம்புகள் தயாரிக்கப்பட்டால் இதற்கான தேவைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.   இவை போலிகளாக இருப்பதால் பலரும் உண்மையான காண்டாமிருக கொம்புகளை வாங்க விரும்புவார்கள்.

ஆகையால் காண்டாமிருக வேட்டை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.   எனவே வேட்டையைத் தடுக்கும் நடவடிக்கைகளுக்குப் பதிலாக இந்த கொம்புகளின் தேவையைக் குறைக்கும் நடவடிக்கை தேவை” எனத் தெரிவித்துள்ளார்.