மும்பை
போலி வருமான சான்றிதழ் அளித்து முதலைமைச்சர் நிவாரண நிதியில் இருந்து பலர் ஏழைகள் உதவித் தொகை பெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா அரசு முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து ஏழைகளுக்கு பல உதவிகள் அளித்து வருகிறது. குறிப்பாக ரூ. 1 லட்சத்துக்கு குறைவாக வருட வருமானம் உள்ளோருக்கு மருத்துவ வசதிகள் போன்றவைகளுக்காக ரொக்க உதவி அளித்து வருகிறது. இந்த உதவியைப் பெற பலர் போலி வருமான சான்றிதழ் கொடுத்து அரசை ஏமாற்றி உள்ளதாக தகவல்கள் எழுந்தன.
இது குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு ஒரு செய்தியை வெளியிட்டது. அதில், “நாக்பூர் வட்ட பாஜக முன்னாள் தலைவர் ஒருவர் அரசு பணிகளை ஒப்பந்தம் மூலம் நடத்தி வருகிறார். அவர் கடந்த 2015ஆம் வருடம் அக்டோபர் மாதம் தனது குடும்ப மொத்த வருமான ரூ.40000 என சான்றிதழ் அளித்து மருத்துவ உதவி கோரி உள்ளார். அதற்காக அரசு 2015ஆம் வருடம் டிசம்பர் மாகம் ரூ.50000 உதவி அளித்தது. ஆனால் அவர் எந்த நோயாலும் அவதிப்படவில்லை என கண்டறியப் பட்டது.
மேலும் இது குறித்து அவர் உறவினர்களிடம் கேட்டபோது அவர்களுக்கு நாக்பூரில் ஒரு வீடும் விவசாய நிலங்களும் உள்ளதாக தெரிய வந்துள்ளது. அந்தக் குடும்பத்தில் உள்ள இரு குழந்தைகள் மும்பையில் ஒரு புகழ் பெற்ற தனியார் பள்ளியில் பெரும் தொகையை கட்டணமாக செலுத்தி கல்வி கற்பதும் அவர்களின் வீட்டில்,ஃபிரிட்ஜ், ஏசி, எல்இடி டெலிவிஷன், போன்ற பல வசதிகளுடன் வசிப்பதும் தெரிய வந்துள்ளது. அது மட்டுமின்றி அவர்கள் மாதம் ரூ.1250 மின் கட்டணம் செலுத்தி வந்ததும் தெரிய வந்துள்ளது” என கூறப்பட்டிருந்தது.
மேலும் இது போல பல நிகழ்வுகளை அந்த நாளேடு வெளியிட்டு இருந்தது. இதைத் தொடர்ந்து சமூக ஆர்வலர் ஒருவர் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் இந்த உதவிகள் குறித்த தகவலை அளிக்குமாறு கேட்டிருந்தார். அதன்படி பலர் தவறான வருவாய் சான்றிதழ் அளித்து முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து உதவிகள் பெற்றுள்ள தகவல்கள் வெளியாகின.
முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் இவ்வாறு குற்றம் இழைத்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.