அகமதாபாத்: பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில், சமீபத்தில், போலி அரசு அலுவலகம் செயல்பட்டு வந்தது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது, போலி நீதிமன்றம் நடைபெற்று வந்தது தெரிய வந்துள்ளது. இதுதான் பிரதமர் மோடியின் குஜராத் மாடல் என விமர்சிக்கப்பட்டு வருகிறது.
போலியான ஐபிஎல் முதல் போலி நீதிமன்றங்கள் வரை அனைத்து போலி திட்டங்களிலும் குஜராத் முன்னிலை வகிக்கிறது பிரதமர் மோடியின் சொந்த மாநிலத்தில், அடுத்தடுத்து நடைபெறும் சட்டவிரோத சம்பவங்கள் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. மேலும் சமூக வலைதளங்களில் நெட்டிசன்களால் கடுமையாக விமர்சிக்கப்படும் வருகிறது.
குஜராத் மாநில தலைநகர் காந்திநகரில் வசிக்கும் மாரிஸ் சாமுவேல் கிறிஸ்டியன் என்ற நபர், அகமதாபாத்தில் ஐந்தரை ஆண்டுகளாக போலி நீதிமன்றத்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது, இவர் நிலம் தொடர்பான விஷயங்களில் வாடிக்கையாளர்களுக்கு ஆதரவாக, தானே நடுவராக ஆள்மாறாட்டம் செய்து போலி நீதிமன்றம் நடத்தி வந்தது கண்டு பிடிக்கப்பட்டுஉள்ளது. இவர் போலி விருதுகளை (ஆர்டர்கள்) வழங்கியது தொடர்பான புகாரில் காவல்துறை விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட போலி நீதிபதியை கைது செய்து, அந்த நீதிமன்றமும் மூடப்பட்டுள்ளது.
அகமதாபாத்தில் உள்ள கரஞ்ச் காவல்நிலையத்தில் சிட்டி சிவில் நீதிமன்றத்தின் பதிவாளர் ஹர்திக் சாகர் தேசாய் தாக்கல் செய்த புகாரின் அடிப்படையில், அகமதாபாத் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், போலி நீதிமன்றம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கிறிஸ்டியன் தன்னை நடுவர் மன்றத்தின் நீதிபதியாகக் காட்டி மக்களை ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது. மேலும் சட்ட தகராறுகளைத் தீர்ப்பதற்காக நீதிமன்றத்தால் நடுவராக நியமிக்கப்பட்டதாகக் கூறி சாதகமான உத்தரவுகளைப் பிறப்பித்ததாக போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தான் நீதிமன்ற தலைமையால் அமைக்கப்பட்ட ஒரு மத்தியஸ்தர் எனக்கூறி மாரிஸ் சாமுவேல் கிறிஸ்டியா என்பவர் நீதிமன்றம் போன்ற அமைப்பை உருவாக்கி அதன் மூலம் மனுக்களைப் பெற்று நிலம் தகராறு தொடர்பான வழக்குகளை நீதிமன்றம் போலவே அலுவலகத்தை உருவாக்கி அதில் வைத்து விசாரித்து தீர்ப்பளித்து வந்துள்ளார்.
இந்த போலி நீதிமன்றம் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. தான் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நடுவர் என்று கூறி, கிறிஸ்டியன் தனது வாடிக்கையாளருக்கு ஆதரவாக ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இந்த வழக்கு, மாவட்ட ஆட்சியரின் கீழ் உள்ள அரசு நிலம் தொடர்பான வழக்கு. பால்டி பகுதியில் உள்ள அந்த நிலம் தொடர்பான வருவாய்ப் பதிவேடுகளில், தனது பெயரைச் சேர்க்க வேண்டும் என கூறியவருக்கு ஆதரவாக கிறிஸ்டியன் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்பிறகு அவர் தனது ‘நீதிமன்றத்தில்’ போலி வழக்குகளைத் தொடங்கி, தனது வாடிக்கையாளருக்கு ஆதரவாக ஒரு உத்தரவைப் பிறப்பித்தார்.
அந்த நிலத்தின் வருவாய் பதிவேடுகளில் தனது வாடிக்கையாளரின் பெயரைச் சேர்க்க கலெக்டருக்கு உத்தரவிட்டார். அந்த உத்தரவை அமல்படுத்த, கிறிஸ்டியன் மற்றொரு வழக்கறிஞர் மூலம், சிட்டி சிவில் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, அவர் பிறப்பித்த அந்த மோசடி உத்தரவை இணைத்தார்.
இந்த நிலையில் தான், நீதிமன்றப் பதிவாளர் ஹர்திக் தேசாய், கிறிஸ்டியன் நடுவர் இல்லை அல்லது தீர்ப்பாயத்தின் உத்தரவு உண்மையானது அல்ல என்பதை சமீபத்தில் கண்டுபிடித்தார். இதைத்தொடர்ந்து, அகமதாபாத்தில் உள்ள நகர சிவில் நீதிமன்றப் பதிவாளர் அளித்த புகாரின் பேரில் இந்த போலி நீதிமன்றம் செயல்பட்டது தெரிய வந்துள்ளது.
காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நிலத்தகராறு தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளவர்களை, கிறிஸ்டியன் தனது வலையில் திட்டமிட்டு சிக்க வைத்துள்ளார். அவர்களிடம் முதலில் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ நடுவராக தன்னை அடையாளப்படுத்திக் கொள்வார். பிறகு காந்திநகரில் நீதிமன்றத்தைப் போல வடிவமைக்கப்பட்டு உள்ள தனது அலுவலகத்திற்கு வாடிக்கையாளர்களை அழைத்து, தீர்ப்பாயத்தின் தலைமை அதிகாரியாக சாதகமான உத்தரவை வழங்கி வந்துள்ளார். இதற்காக வாடிக்கையாளர்களிடமிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை தீர்ப்பதற்காக தனது கட்டணமாக வாங்கியுள்ளார். அவரது கூட்டாளிகள் நீதிமன்ற ஊழியர்களாகவோ அல்லது வழக்கறிஞர்களாகவோ நின்று வழக்குகள் உண்மையானவை என்ற தோற்றத்தை உருவாக்கி வந்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.
மாரிஸ் சாமுவேல் கிறிஸ்டியன் தனது நோக்கத்தை நிறைவேற்ற, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக செயல்படும் வகையில், போலி நடுவர் நடவடிக்கைகளையும் நடத்தியதாகக் கூறப்படுகிறது. தனது வாடிக்கையாளர்களுக்கு ஆதரவாக போலியான நடுவர் மன்றத் தீர்ப்புகளை கிறிஸ்டியன் வழங்கி வந்ததும், பின்னர் தனது வாடிக்கையாளர்களுக்கு சட்டவிரோத ஆதாயத்தை வழங்குவதற்காக நீதிமன்றத்தில் இந்த போலி உரிமைகோரல்களை முன்வைப்பதும் கிறிஸ்டின் செயல்பாட்டின் செயல் என்று காவல்துறை அறிக்கை தெரிவித்துள்ளது. .
மாரிஸ் சாமுவேல் கிறிஸ்டியன் தன்னை நீதிபதியாக அடையாளப்படுத்தி பல உத்தரவுகளையும் பிறப்பித்தது தெரியவந்துள்ளது இவர் மீது, ஏற்கனவே கடந்த 2015ம் ஆண்டு மணிநகர் காவல் நிலையத்தில் மோசடி புகார் ஒன்றை எதிர்கொண்டுள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது.
பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான, குஜராத்தில், ஏற்கனவே போலி ஐபிஎல் அணி கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்நது, கடந்த ஆண்டு, குஜராத்தின் மோர்பி மாவட்டத்தில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI) அதிகாரப்பூர்வ சுங்கச்சாவடியில் இருந்து 600 மீட்டர் தொலைவில் தனியார் நிலத்தில் கட்டப்பட்ட போலி சுங்கச்சாவடி கண்டுபிடிக்கப்பட்டு அகற்றப்பட்டது. அன் மையில் அனுபம் கெர் புகைப்படம் கொண்டு அச்சிடப்பட்ட லட்சக்கணக்கான ரூபாய் நோட்டுகளும் குஜராத்தில் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதோடு, போதைபொருள் கடத்தல் உள்பட பல போலிகள் அரங்கேறி வந்த நிலையில், தற்போது ஒரு நபர் ஒரு போலி நீதிமன்றத்தை நிறுவி மோசடி செய்த சம்பவம் குஜராத்தில் அரங்கேறியுள்ளது. இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.