டெல்லி :
மணிப்பூரில் ராணுவம் நடத்தியதாக கூறப்படும் போலி என்கவுண்டர்கள் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.
நக்சலைட்டுகள் அதிகமாக காணப்படும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ராணுவத்திற்கு சிறப்பு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி பொதுமக்களையும் போலி என்கவுண்டர்கள் மூலம் கொல்வதாக ராணுவத்தினர் மீது புகார் எழுந்தது.
என்கவுண்டர்களின் மூலம் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மனுவில் இதுவரை 62 பேர் ராணுவத்தால் போலி என்கவுண்டர் மூலம் கொல்லப்பட்டுள்ளதாகவும், ராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரம், ராணுவ வீரர்களால் தவறாக பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் மதன் பி லோகூர், ஆர்.கே. அகர்வால், போலி என்கவுண்டர் உள்ளிட்ட குற்ற வழக்குகளில் ராணுவத்திற்கு இருக்கும் சிறப்பு அதிகாரத்தை கேடயமாகப் பயன்படுத்த முடியாது என நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளார். ராணுவத்தினருக்கு என தனியாக ஒழுங்கு விதிகள் இருப்பதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள் அதை மீறினால் குற்றவியல் தண்டனை நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது என்றனர்.
62 பேர் போலி என்கவுண்டர் செய்யப்பட்டது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு அமித்பஸ் பூரி நீதிமன்ற வழக்கறிஞர் மேனகா குருசாமியை நீதிபதிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
வடகிழக்கு மாநிலங்களில் ராணுவத்தால் இதுவரை சுமார் 1500 பேர் போலி என்கவுண்டர் மூலம் கொல்லப்பட்டுள்ளதாக ராணுவத்தினர் மீது குற்றச்சாட்டு உள்ளது. இதில் 31 என்கவுண்டர்கள் போலியானது என தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஏற்கனவே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.