டெல்லி: சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா நெகட்டிவ் என்று போலியான சான்றிதழ்கள் விற்கப்படும் தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விமான பயணத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள அதே நேரத்தில் பயணிகள், கொரோனா இல்லை என்ற நெகட்டிவ் சான்றிதழுடன் பயணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஆனால் சில நாடுகளில் சுற்றுலா பயணிகளுக்கு போலியான கொரோனா நெகட்டிவ் சான்றிதழ்கள் வினியோகிக்கப்படுவதாக வாஷிங்டன் போஸ்ட் என்னும் பத்திரிகை தெரிவித்து உள்ளது.
இது குறித்து அந்த பத்திரிகை தெரிவித்து உள்ளதாவது: பிரான்ஸ், பிரேசில், இங்கிலாந்து ஆகிய நாடுகளில் போலியான கொரோனா வைரஸ் சோதனைகள் ஏற்கனவே பதிவாகி உள்ளன. கொரோனா இருக்கிறதா இல்லையா என்பதை அறிய நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆகையால் அதன் முடிவுகள் தவறாக வாய்ப்பு இல்லை.
அதே நேரத்தில் பிரேசிலில் கடற்கரையை கண்டு ரசிப்பதற்காக சென்ற 4 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் போலியான கொரோனா நெகட்டிவ் சான்றிதழ்களுடன் கைது செய்யப்பட்டனர். சமீபத்தில், பிரான்சின் பாதுகாப்பு அதிகாரிகள் பாரிஸின் சார்லஸ் டி கோலே விமான நிலையத்தில் போலி கொரோனா சோதனை சான்றிதழ்கள் விற்பனை செய்யப்படுவதை கண்டுபிடித்தனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு போலியான சான்றிதழ்களுடன் யாரேனும் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு, அவர்களுக்கு கொரோனா பாசிட்டிவ் இருப்பது உறுதி செய்யப்பட்டால் அதன் விளைவுகள் மோசமானதாக இருக்கும் என்று சுகாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.