தகுதியே இல்லாமல் 50 பேருக்கு ஆபரேஷன்.

உண்மையான பெயர் பங்கஜ் மோகன். உண்மையிலேயே எம்பிபிஎஸ் பட்டம் வாங்கியவர்.

ஆனால் சொல்லிக் கொண்டதோ தன்னுடைய முழுப்பெயர், பங்கஜ் மோகன் சர்மா. முதுநிலை படிப்பான எம்டி மற்றும் DNP (Cardiology) ஆகிய மேற்படிப்புகளை முடித்ததாகவும் சொல்லிக்கொண்டு தனியார் மருத்துவமனைகளில் மருத்துவம் பார்த்து இருக்கிறார். 50க்கும் மேற்பட்டோருக்கு இருதய அறுவை சிகிச்சைகளையும் செய்து வந்திருக்கிறார்.

இப்படிப்பட்ட நிலையில் தான் ஒரு வழக்கறிஞருக்கும் சமூக ஆர்வலருக்கும் டாக்டர் மோகன் சர்மா மீது சந்தேகம். இவர் அறுவை சிகிச்சை செய்யும் அளவுக்கு உண்மையிலேயே ஹார்ட் ஸ்பெசலிஸ்ட் தானா என்ற சந்தேகம் தான் அது.

விஷயத்தை தோண்டிய போது தான் உண்மையான இருதய ஸ்பெஷலிஸ்ட் மோகன் சர்மா என்பவரின் மெடிக்கல் கவுன்சில் பதிவு எண்ணை தன்னுடைய பதிவு எண்ணாக மாற்றிக்கொண்டு மோசடி செய்து வருகிறார் என்பது அம்பலமானது.

ஒரு இதய நிபுணர் இல்லாத ஒரு சாதாரண எம்பிபிஎஸ் டாக்டரை எப்படி அரியானா மாநிலத்தின் ஃபரிதாபாத் நகர தனியார் மருத்துவமனைகள் இதய அறுவை சிகிச்சை வரை அனுமதித்தன என்பது பற்றி போலீசாரும் இந்தியன் மெடிக்கல் கவுன்சில் அதிகாரிகளும் தற்போது விசாரித்து வருகின்றனர்.

எல்லாவற்றையும்விட இந்த எம்பிபிஎஸ் டாக்டர் அறுவை சிகிச்சை செய்த நோயாளிகளின் தற்போதைய நிலை என்ன என்ற கேள்விக்குறியும் எழுந்துள்ளது.

– செய்திப்பிரிவு..