கொரோனா இரண்டாவது அலையின் தீவிரத்தாலும், ஊரடங்கு தொடர்வதாலும் திரையரங்குகள் இன்னும் திறக்கப்படவில்லை.

இதனால் சில பெரிய பட்ஜெட் திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள் நேரடி ஓடிடி வெளியீடை பரிசீலித்து வருவதாகத் தெரிகிறது.

தொடர்ந்து பட வெளியீடுகள் தள்ளிப்போவது தயாரிப்பாளர்களுக்கு நிதி நெருக்கடியை உருவாக்கியுள்ளது .

இந்நிலையில் ஃபஹத் ஃபாசிலின் மாலிக் மற்றும் ப்ரித்விராஜ் நடிப்பில் கோல்ட் கேஸ் என இரண்டு படங்களை தயாரித்திருக்கும் ஆண்டோ ஜோசஃப், இரண்டையுமே நேரடியாக ஓடிடியில் வெளியிட ஆயத்தமாகி வருகிறார்.

ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிய முதல் மலையாளத் திரைப்படம் சூஃபியும் சுஜாதையும். கடந்த வருடம் ஜூலை மாதம் 3ஆம் தேதி இந்தப் படம் வெளியானது. இதைத் தொடர்ந்து த்ரிஷ்யம் 2, ஸி யூ ஸூன், ஜோஜி, தி கிரேட் இண்டியன் கிச்சன், கோல்ட் கேஸ் உள்ளிட்ட இன்னும் சில படங்களும் நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியாயின.

ஃபகத் பாசில் நடிப்பில் உருவாகியுள்ள மாலிக் திரைப்படம் வருகிற ஜூலை 15ஆம் தேதி அமேசான் பிரைம் OTT தளத்தில் நேரடியாக வெளியாகிறது. மகேஷ் நாராயணன் எழுதி இயக்கியுள்ள மாலிக் படத்தை முன்னணி தயாரிப்பு நிறுவனமான அண்டோ ஜோசப் நிறுவனம் தயாரித்துள்ளது.

நடிகர் ஃபகத் பாசிலுடன் இணைந்து நடிகை நிமிஷா விஜயன் கதாநாயகியாக நடிக்க, நடிகர் ஜோஜூ ஜார்ஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் மாலிக் திரைப்படத்தின் மிரட்டலான புதிய ட்ரெய்லர் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.