நாக்பூர்: மராட்டிய சட்டசபைக்கு நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து முன்கூட்டியே தேர்தல் நடத்தும் எண்ணமில்லை என அம்மாநில பா.ஜ.க முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
இந்தாண்டின் இரண்டாவது பாதி காலகட்டத்தில், மராட்டிய சட்டசபையின் ஆயுள் முடிவடையவுள்ளதால், நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து, சட்டமன்ற தேர்தலையும் நடத்திவிட, ஆளுங்கட்சி திட்டமிட்டுள்ளது என்ற கருத்துக்கள், அரசியல் மட்டங்களில் உலா வந்தன.
நாக்பூர் மெட்ரோ நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த அம்மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸிடம் இதுகுறித்து கேட்கப்பட்டபோது, “அப்படியான எந்த திட்டமும் இல்லை. மராட்டிய சட்டசபைக்கு உரிய காலத்திலேயே தேர்தல் நடைபெறும். இதை நீங்கள் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்” என்றார்.
கடந்த 2014ம் ஆண்டு அக்டோபர் மாதம் மராட்டிய சட்டசபைக்கு தேர்தல் நடைபெற்றது என்பது நினைவுகூறத்தக்கது.
– மதுரை மாயாண்டி