டெல்லி: அரசியல் கட்சிகளிடம் பாரபட்சம் காட்டுவதாகவும், தனிநபர் மற்றும் தரவுகள் பாதுகாப்பு தொடர்பான புகார்கள் குறித்தும், பேஸ்புக் மற்றும் டிவிட்டர் நிறுவனங்களுக்கு நாடாளுமன்ற கூட்டுக் குழு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதையடுத்து, ஃபேஸ்புக் உயரதிகாரி நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்.
சமூக வலைதள நிறுவனங்களான ஃபேஸ்புக்,. டிவிட்டர் போன்றவை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவாகவும், காங்கிரஸுக்கு எதிராக செயல்படுவதாக புகார்கள் எழுந்தன. பாஜக மற்றும் வலதுசாரி தலைவர்களின் வெறுப்புணர்வூட்டும் பேச்சுகளை பேஸ்புக் தடை செய்வதில்லை என்றும் அதே சமயத்தில் காங்கிரஸ் தலைவர்களின் வீடியோக்களையும், பதிவுகளை தடை செய்வதாகவும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியிருந்தார்.
இதுதொடர்பாக ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஸுகர்பெர்க்குக்கு கடிதமும் எழுதப்பட்டது. இநத் நிலையில், அமெரிக்காவின் ‘வால் ஸ்ட்ரீட் ஜேர்னல்’ பத்திரிகையில் பரபரப்பு தகவல் ஒன்று வெளியானது. அதில், பேஸ்புக் நிறுவனத்துக்கும், பாஜகவுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டை வீசியிருந்தது. இது மேலும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, அரசியல் கட்சிகளிடம் பாரபட்சம் மற்றும், தனிநபர் தகவல் பாதுகாப்பு தொடர்பாக விளக்கம் அளிக்க பாஜக எம்.பி. மீனாட்சி லேகி தலைமையிலான நாடாளுமன்ற கூட்டுக் குழு பேஸ்புக், டிவிட்டர் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அந்த நோட்டீசில், தனிநபர் தகவல் பாதுகாப்பு மசோதா-2019 தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக் குழு முன், பேஸ்புக் நிறுவனத்தின் இந்தியப் பிரதிநிதிகள் 23ந்தேதி ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், டிவிட்டர் நிறுவனத்தின் நிர்வாகிகள் வரும் 28ம் தேதி, நேரில் ஆஜராக வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
அதன்படி, அந்தக் குழு முன்பு பேஸ்புக் நிறுவனத்தின் கொள்கை பிரிவு தலைவர் அன்கி தாஸ் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று ஆஜராகி விளக்கமளித்தனர். அப்போது, அவர்களிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டதாகவும், அதற்கு அவர்கள் பதில் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், என்ன கேள்விகள் கேட்கப்பட்டது,அவர்களின் பதில் என்ன என்பது குறித்து சரியான தகவல்கள் வெளியாகவில்லை.
இதற்கிடையில், ஆன்லைன் நிறுவனங்கள், தாங்கள் விற்பனை செய்யும் பொருட்கள் தயாரிக்கும் நாடு உள்பட பல்வேறு தகவல்களை தெரிவிக்கவும் நாடாளுமன்ற கூட்டுக் குழு உத்தரவிட்டிருந்தது. ஆனால், குழுவினர் முன்பு ஆஜராகி விளக்கமளிக்க முடியாது என அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது
இதுகுறித்து, கூட்டுக் குழு தலைவர் மீனாட்சி லேகி கூறுகையில், ‘அமேசான் நிறுவனத்தின் இந்த செயல், உரிமை மீறலைக் காட்டுகிறது. அந்நிறுவனத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பரிந்துரைப்போம்’ என்றார்.
இந்திய முழுவதும் அனைத்து தரப்பு மக்களிடையே சமுக வலைதள பயன்பாடு தற்போது அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக பேஸ்புக் மற்றும் ட்விட்டர் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகம். பேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற சமுக வலைதளத்தில் தனிநபர் தகவல்கள் திருடப்படுவதாக தொடர்ந்து எழுந்தது. இதையடுத்து கடந்த ஆண்டு தனிநபர் தகவல் பாதுகாப்பு மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.