சிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன்

மருதமலை படத்தில் வடிவேல் சொல்வார்..சண்டாளி அவன் சும்மா போனால்கூட இவ அவனை விட மாட்டேன்றாளே என்று.. அப்படித்தான் கடந்த சில ஆண்டுகளாகவே சினிமாவும், சர்ச்சையை விடமாட்டேன் என்கிறது.. சர்ச்சைகளும், சினிமாவைவிட மாட்டேன் என்கிறது.

தமிழ்த்திரையுலகில் படத்தின் தலைப்பு வைக்கும்போது ஏதாவது ஒரு குரூப், முற்றிலும் வித்தியாசமான காரணத்தை பிடித்து கம்பு சுற்ற ஆரம்பித்துவிடும்..அப்புறம் படம் தியேட்டருக்கு வருவதற்குள் ஒரு முறையாவது ஏதாவது ஒரு குரூப் கோர்ட்டுக்கு ஓடிப்போய் முட்டுக்கட்டை.. அப்புறம் கொஞ்சம் அரசியல் கலந்துவிட்டால் போதும்.. தீர்ந்தது திருவிழா..

ஆனால் இந்தி திரையுலகத்தை பொறுத்தவரை இப்படியொரு சாபம் அதற்கு கிடைக்கவில்லை.. இருந்தாலும் பாலிவுட்டின் பெருமையை காப்பாற்றுவதற்காகவே அடிக்கடி சர்ச்சைகள் உருவாகும்..அல்லது உருவாக்கப்படும்..

வரலாறு பிரகாரம், மகன் சலீமை (ஜஹாங்கீர்) காதலித்த குற்றத்திற்காக அனார்கலிக்கு உயிரோடு சமாதி கட்டுவார் அக்பர்.. இதனை ஒரு தரப்பு நம்பும். ஆனால் இன்னொரு தரப்பு நம்பாது..

இந்தியாவின் நம்பர் ஒன் வசூல் பிளாக் பஸ்டராக இன்றுவரை கருதப்படும் மொகல் – ஏ- ஆசாம் (1960) படத்தின் கிளைமாக்சில் அனார்கலியை வெளியுலகிற்கு தெரியாமல் சமாதியிலிருந்து அவளின் தாயாரோடு அக்பர் அனுப்பிவைப்பார்.. அனார்கலியின் தாய்க்கு ஒருமுறை கொடுத்த வாக்கை காப்பாற்றுவதற்காக, மீண்டும் அனார்கலி சலீம் வாழ்க்கையில் எக்காரணம் கொண்டும் திரும்பி வரக்கூடாது என்ற நிபந்தனையோடு தப்பிப்போகவிடுவார்.. அனார்கலி என்ற கேரக்டரே உண்மைதானா என்று கேட்கிற கோஷ்டியும் உண்டு..

இப்படி சர்ச்சையிலேயே பல ரகங்கள் இருப்பதால் சலீம்-அனார்கலி விவகாரம் அவரவர் கற்பனைக்கு வசதியாக போய்விட்டது.. காதல் ரசம் சொட்டும் விஷயம் என்பதால் அனார்கலியை யாரும் வம்புக்கு இழுக்க விரும்பவில்லை..

அனால் தற்போது சஞ்சய்லீலா பன்சாலி இயக்கி தீபிகா படுகோன் நடித்த பத்மாவதி திரைப்படத்தின் நிலைமையே வேறு.. ராஜஸ்தான் சித்தூர்  ராணி பத்மினி அல்லது பத்மாவதி என்ற கேரக்டரை இன்று ரஜபுத்திர மக்கள் காவல் தெய்வமாகவே பார்க்கிறார்கள்.

தன்னை அடைவதற்காக அலாவுதீன் கில்ஜி படையெடுத்து சண்டையிட்டபோது தன் நாட்டு வீரர்கள் கொல்லப்பட்ட பிறகு தாமும் பிடிபடுவோம் என்று தெரியவந்ததும் மானபங்கத்தை தவிர்ப்பதற்காக ஆயிரக்கணக்கான பெண்களுக்கு தலைமை தாங்கி தீக்குண்டத்தில் இறங்கியவர் சித்தூர் ராணி என்பது ஒரு தரப்பு வரலாறு..

அப்படியொரு ராணியே இல்லை என்றும், அது கற்பு மற்றும் கணவன் இறந்தால் அவனை தீமூட்டும்போது தீயில் விழுந்து இறக்கும் உடன்கட்டை அல்லது சதி என பழக்கத்தை மேன்மை படுத்தி கவித்துவமாய் சொல்லப்பட்ட ஒரு புனைவு என்கிறது இன்னொரு தரப்பு..

1540 ஆம் ஆண்டு ஜெயசி என்ற ஒரு கவிஞரின் கவிதையில், ராணி பத்மினியை அடைவதற்கு வெறியோடு வந்த கில்ஜி, கடைசியில் அவளை சாம்பலாகத்தான் இரு கைப்பிடிகளில் அள்ளிப்பார்க்க முடிந்தது என்று விவரிக்கப்பட்டுள்ளது..

எல்லாவற்றையும்விட, முக்கியமான விஷயம், உண்மையோ பொய்யோ, அலாவுதீன் கில்ஜிக்கு முகத்தைக்கூட காட்டமாட்டேன் என்று அடம்பிடித்தவர் ராணி பத்மினி..

1963ல் தமிழில் சிவாஜி-வைஜெயந்திமாலா நடித்து சித்தூர் ராணி பத்மினி என ஒரு படம் வந்தது.. அதில் தன் நாட்டு சபைக்கு வந்திருக்கும் அலாவுதீன் கில்ஜியின் பார்வைக்கு நேரில் வர சம்மதிக்கமாட்டார்.. ஆனால் ராணி வைஜெயந்திமாலா வேறு ஒரு அறையில் நடனம் ஆட, அதை அப்படியே உள்வாங்கி பிரதிபலிக்கும் கண்ணாடியில் மட்டுமே சபையில் உள்ள கில்ஜி பார்க்க முடியும்.. கடைசியில் வைஜெயந்திமாலா தீயில் விழுந்து மாய்த்துக்கொள்வார்..

இப்படி ஆளாளுக்கு சித்தூர் ராணி பத்மினியை காட்சிப்படுத்திக் கொண்டார்கள்..ஆனால் எந்த இடத்திலும் அலாவுதீன் கில்ஜியையும் ராணியையும் காதல் காட்சிகளில் தொடர்புபடுத்தி பார்த்ததில்லை..

தற்போது இந்தி பத்மாவதி படத்தில். அலாவுதீன் கில்ஜி, கனவில் ராணி பத்மாவதியை காதலிப்பதுபோல் ரொமான்ட்டிக் காட்சிகள் வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.. இப்படியொரு தகவல் கசிந்த பிறகே பிரச்சினைகள் வெடிக்க ஆரம்பித்தன. ஆனால் படக்குழுவினரோ அப்படியெல்லாம் இல்லவேயில்லை என்று விளக்கம் கொடுத்தும் எதிர்ப்பாளர்கள் விட்டபாடில்லை..

ராணி பத்மாவதியாக நடித்த தீபிகா படுகோனேவின் தலையை துண்டித்தால் ஐந்துகோடி பரிசு என்றும் இயக்குநர் பன்சாலியின் தலைலை துண்டித்தால் பத்துகோடி பரிசு என்றும் அறிவித்துள்ளார்கள்.. இந்த அராஜகத்தை கண்டித்து ஒட்டுமொத்த இந்திய திரையுலக பிரபலங்களும் பத்மாவதி படக்குழுவினருக்கு ஆதரவாக களத்தில் குதித்துள்ளனர்.. படைப்பு சுதந்திரம் அடியோடு பறிக்கப்படும் அபாயகரமான போக்கு என்று அவர்கள் ஆவேசத்தை வெளிப்படுத்துகின்றனர்.நாம் பிரச்சினையின் முக்கிய ஆணிவேர் பகுதிகளை பார்ப்போம்..

பொதுவாக, அமெரிக்க, பிரிட்டன் போன்ற மேற்கத்திய நாட்டு படங்களில் கிறிஸ்துவம் தொடர்பாய் சர்ச்சையாக எடுத்தாலும் அவர்கள் பெரும்பாலும் கண்டுகொள்வதில்லை.. முட்டுக்கட்டை போடுகிற அளவுக்கு எதிர்ப்பு கிளம்புவது என்பது அங்கெல்லாம் அடிக்கடி நடக்கிற விஷயமல்ல..

ஆனால் இஸ்லாமிய நாடுகளில் இஸ்லாத்துக்கு எதிராக ஒரேயொரு காட்சி இருந்தாலும்கூட அவ்வளவுதான்.. படமே வெளியாகாது.. படத்தின் தொடர்புடையவர்களுக்கு எச்சரிக்கைகள் விதவிதமாய் பறக்கும்.. உயிருக்கு விலை வைத்து அறிவிப்புகளும் வெளியாகிய வண்ணம் இருக்கும்… அவர்களின் மதத்தை அவர்கள் அப்படி தாங்கிப்பிடித்து காப்பாற்றுகிறார்கள்.. அவர்களின் மத நம்பிக்கைகளுக்கு எதிரான விஷயங்களை தலைதூக்காமல் பார்த்துக்கொள்வதில் அக்கறை காட்டுகிறார்கள்..

ஆனால் இந்து மதத்தில் நிலைமையே வேறு.. கிறிஸ்துவத்துக்கு இயேசு, இஸ்லாத்துக்கு நபிகள் என்று சொல்லப்படுகிற மாதிரி இந்து மதத்தில் ஒற்றைத் தலைமை இல்லை.. பல்வேறு தேசிய இனங்கள் கொண்ட ஒரு கூட்டமைப்பாக இந்தியா என்கிற நாடு உள்ளதுபோல, இந்து மதமும் பல்வேறு நம்பிக்கைகளால் மெல்லிழையால் கோர்க்கப்பட்ட ஒரு மென்மையான துணிபோல பரந்து விரிந்துள்ளது.. ஒட்டுமொத்த இந்த மதத்திற்கும் என அங்கீகரிக்கப்பட்ட கடவுளரும் சரி.. காவலரும் சரி.. யாரும் இல்லை..

இந்துக்கள் தொடர்பான விஷயங்களை விமர்சனப்படுத்தி திரைப்படம் எடுக்க பலரும் தயக்கமோ அச்சமோ இல்லாதிருப்பதற்கு இதுகூட ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம்.. ஆனால் இந்துக்களின் உணர்வை தேவையில்லாமல், பொருத்தமற்ற வகையில் சீண்டிப் பார்த்தவர்களெல்லாம் கேட்பாரற்ற பொருளாகிப்போவர்கள் என்பது இறந்த காலங்கள் உணர்த்தும் வரலாறு. மதவெறி தலைக்கு ஏறாமல் சாதாரண இறைபக்தி என்ற அளவோடு காலம் தள்ளும் கோடானு கோடி மக்கள்தான் இங்கே பெரும்பான்மை.. அப்படிப்பட்ட பெரும்பான்மை இந்துக்களின் நம்பிக்கையை தாறுமாறாக சித்தரித்தால் யார் கேட்கப்போகிறார்கள் என்ற இறுமாப்பாகக்கூட திரையுலகின் ஒரு தரப்புக்கு இருக்கலாம்..இந்த இடத்தில் திரையுலகினருக்கு மிகமிக அவசியம், சுயகட்டுப்பாடு என்கிற விஷயம்..

நிஜ வரலாறு அல்லாமல் புனைவு விஷயமாக இருந்தாலும்கூட அதில் மேன்மையாய் நம்பப்படுகிற விஷயங்களை கேவலமாய் சித்தரிக்க முற்பது அதைவிட கேவலத்திலும் கேவலமானது.. சர்ச்சையாக படம் எடுத்தால்தான் கோடிகளை குவிக்கமுடியும் என்று திட்டமிட்டே படம் எடுப்பவர்கள் இந்த ரகம்தான்..

அதேவேளையில் ஒரு படத்தை எதிர்ப்பவர்கள் எதிர்க்கவேண்டிய இடத்தைவிட்டுவிட்டு எல்லா இடத்திலும் பதற்றத்தை உருவாக்கிக்கொண்டிருப்பது நல்லதல்ல.. படத்தை ஓட்டமுடியாது என்று எச்சரிப்பதைவிட, புறக்கணிக்குமாறு வேண்டுகோள் விடுத்து படத்தின் தோல்வியை உறுதிசெய்தால் மீண்டும் ஏன் அப்படியெல்லாம் சர்ச்சைகளை வைத்து எடுக்கப்போகிறார்கள்..

இரண்டாவது ஆணிவேர் விஷயம், அரசு தரப்பு பற்றியது… இந்த திரையுலக விஷயத்தில் காமெடியாகவும் இன்னொரு பக்கம் ஆத்திரம் வரும்படியும் அரசு செயல்படுவது அவமானகரமானது..

காமெடி என்னவென்றால், படங்களை சென்சார் செய்யும் போர்டுக்கு தலைவர்களையும் உறுப்பினர்களையும் போதிய அறிவாற்றல் இல்லாதவர்களாக பார்த்து பார்த்து போடுவது..

அரசு நிர்வாகம், சட்டம், மருத்துவம், விதிமுறைகள், வரலாறு, இலக்கியம், புராணம்,  கலாச்சாரம், பண்பாடு, உண்மைத்தகவல்கள் உள்பட பல விஷயங்களை உள்ளடக்கி எடுக்கப்படும் படங்களை தணிக்கை செய்வது ஒன்றும் சாதாரண விஷயல்ல.. அதற்கு விஷயங்களை மிகவும் நுட்பமாக ஆராயும் வல்லமை தேவை..

சென்சார் போர்டை அப்படியொரு வல்லமை பெற்ற அமைப்பாக அரசு மாற்றவேண்டும்.. பலம் வாய்ந்த சென்சார்போர்டு ஒரு  படத்தை அலசி ஆராய்ந்து சான்றிதழ் வழங்கிய பிறகு அந்த படம் தங்கு தடையின்றி ஒடக்கூடிய அளவுக்கு நிலைமை இருக்கும்படி, சட்டத்தின் மாட்சிமையை நிலை நிறுத்துவது ஒரு அரசாங்கத்தின் கடமை.. அந்த கடமையிலிருந்து தவறுமேயானால் அது முதுகெலும்பில்லாத ஒரு கோழை அரசாங்கம்..

தணிக்கை செய்யப்பட்ட ஒரு படத்திற்கு எதிர்ப்பு காட்ட திரைப்பட வாரியத்தைத்தான் கேள்வி கேட்கவேண்டும். அந்த அமைப்பிடம்தான் முறையிட வேண்டும் என ஏற்படுத்தவேண்டும்.. தணிக்கை செய்த படத்துக்கெல்லாம் தடங்கல் என்றால் அப்புறம் அதற்கு, வீணாய் ஒரு சென்சார் போர்டு..?

நாட்டின் நீதித்துறைக்கு உச்ச அமைப்பான சுப்ரீம் கோர்ட்டே என்ன சொல்கிறது? பத்மாவதி படம் முதலில் சென்சார் சர்ட்டிபிகேட் பெறட்டும்..அதன் பிறகுதான் நாங்கள் தலையிட முடியும் என்கிறது..

 

ஆனால் வட மாநிலங்களில் உள்ள அரசுகள், சென்சாரே செய்யப்படாத பத்மாவதி படத்துக்கு அடுத்தடுத்து தடைவிதித்து வருகின்றன.. என்னே அவர்களின் அறிவு?