சிறப்பு கட்டுரை : ஏழுமலை வெங்கடேசன்

சமீபகாலமாய் பரபரப்பாக பேசப்படும் விஷயங்கள், விருப்பமில்லாமல் மனைவியுடன் உறவு மற்றும் ஆணைப்போலவே பெண்ணுக்கும் தடம் மாற உரிமை உண்டு என்பதை வற்புறுத்தும் கருத்துக்கள்.. இதில் விருப்பமற்ற உறவைப்பற்றி இப்போது அலசுவோம்..

பொதுவாக ஆணும் பெண்ணும் சமம் என போகிறபோக்கில் சொல்லிவிட்டு போவதே முற்போக்கு சிந்தனை என கருதப்படுகிறது.. ஆனால் நிஜத்தில் பார்த்தால் இது எவ்வளவு தூரம் சாத்தியம் என்றே தெரியவில்லை..

ஆணும் பெண்ணும் சமம் என்பது உண்மையென்றாலும், அது பலம் மற்றும் பலவீனங்களை பொறுத்து இடத்திற்கு ஏற்ப மாறுபட்டுக்கொண்டே இருக்கும்..

அதிலும் இருவரின் குடும்ப வாழ்க்கையின் ஒவ்வொரு பக்கத்தையும் சட்டத்தின் பார்வை கொண்டே அணுகுவது என்பது ஆரோக்கியமானதல்ல..

மனைவியாக இருந்தாலும் அவள் விருப்பமின்றி கணவன் உறவுகொண்டால் அது பலாத்காரம் என்று சொல்லிவந்தார்கள்.. இப்போது 18 வயதுக்குட்ட மனைவியாக இருந்தால் மட்டுமே பலாத்காரம் என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.. 18 வயதுக்குற்பட்ட பெண் என்றால் அவளின் திருமணமே செல்லாது என்பது வேறு விஷயம்..

 

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புப்படி பார்த்தால், 18 வயதுக்கு மேற்பட்ட மனைவியுடன் கட்டாய உறவு வைத்துக்கொண்டால், கணவன் மீது பாலியல் பலாத்கார புகாரை மனைவி தரமுடியாது என்று அர்த்தம் வருகிறது..

பொதுவாக தம்பதியராகி தாம்பத்ய வாழ்க்கைக்கு பழகிவிட்டவர்களுக்கு இந்த  கட்டாய உறவு என்பது பொதுவெளியில் சித்தரிக்கப்படுகிற அளவுக்கு மிக மிக மிக அதிபயங்கரமான ஒன்றாய் திகழ்கிறதா என்பதுதான் இங்கு முக்கியமான கேள்வியே..

‘இருதரப்பு ஈர்ப்பு’ என்பது பாலியல் தொழிலில்கூட என்பதெல்லாம் நினைத்து பார்க்க முடியாதது. அங்கெல்லாம் ஒன்வே எனப்படும் ஒரு வழிப்பாதை பயணம்தான்.

காரியங்களை சாதித்துக்கொள்வதற்காக படுக்கையை பகிர்ந்துகொள்ளும் பெண்களிடம்கூட முழு ஈடுபாடு சாத்தியமே இல்லாதது.. வேண்டுமானால் ஆணின் செல்வாக்கை பொறுத்து. அவனை பெரிய பராக்கிரமசாலியாய் சித்தரித்து அவனை அவனே நம்பவைப்பதற்காக முக்கல் முனகலை டம்மியாய் கொடுத்து நடிப்பார்கள்.. அவ்வளவே..

காமம் என்ற ஒற்றைப்புள்ளிக்காகவே ரகசியமாய் கூடும் கள்ளக்காதலில் மட்டுமே இருதரப்பு முழு ஈடுபாட்டுக்கு சாத்தியம்..

ஆனால் இந்த இருதரப்பு சம்மதம் மற்றும் ஈடுபாடு என்பது எல்லா நேரமும் கணவன் – மனைவி இடையே கிடைக்குமா என்றால் அதற்கு சாத்தியமே இல்லை..

பணி நிமித்தமாக ஏராளமான ஆட்களுடன் பேசி வெளியுலகில் சுற்றிவிட்டு திரும்பும் ஆணின் உணர்வுக்கு, வீட்டுக்குள்ளே உழலும் மனைவியின் உணர்வு எப்படி எடுத்து எடுப்பிலேயே சம்மதம் கொடுத்துவிடமுடியும்.? அப்படியென்றால் இருதரப்பு சம்மதமே இல்லாமல்தான் தாம்பத்யம் நடைபெறுகிறதா என்றால், பாதிக்கும் மேற்பட்ட சந்தர்ப்பங்களில் அப்படி இருக்கவே வாய்ப்பு அதிகம்..

அப்போது பெண் மீது ஆண் பயங்கரமாய் பாலியல் வன்முறை திணிக்கிறான் என்றுதானே அர்த்தமாகும் என்ற கேள்வி எழாமல் போகாது.. ஆனால் குடும்பம் என்ற அமைப்புக்குள் வந்துவிட்ட பிறகு பல விஷயங்கள் வீரியங்களை இழந்துவிடும்..

எப்பேர்பட்ட ஆணும், தனது மனைவியிடம் அடங்கிப்போகிறானே… அதற்கு மனைவி அப்படியொரு வன்முறையை பிரயோகித்து மிரட்டி வைத்திருக்கிறார் என்றா அர்த்தம் ? உடல்தேவைக்கு மனைவியை விட்டால் வேறு பெண்ணே கிடைக்கமாட்டாளே என்ற கணவனின் கையறு நிலையா? அதெல்லாம் ஒன்றுமில்லை..

குடும்பம் என்கிற கட்டமைப்பை சிந்தாமல் சிதறாமல் கொண்டுபோகிற திறமை தன்னைவிட மனைவிக்கு மட்டுமே உண்டு என கணவனுக்கு உள்மனம் கொடுக்கும் பயம்தான்.. அதைவிட முக்கியமான விஷயம், வாழ்க்கைத்துணைவியான அவள் மேல்கொண்ட அளவில்லா நேசம்..

அதனால்தான் குடும்ப பிரச்சினைகளுக்காக ரூம் போட்டு அழும் அளவுக்கு கணவன் தள்ளப்பட்டாலும் சமரசம் செய்துகொண்டே அடங்கிப்போய் விடுகிறான்.. பல மன வலிகள், வேதனைகள் இருந்தாலும் தாங்கிக்கொண்டு விட்டுக்கொடுத்து போவதின் அடையாளம் மற்றம் வாழ்வியல் முறை இது..

இதேபோன்ற வலிதான் விருப்பமற்ற தாம்பத்ய உறவில் மனைவிக்கு ஏற்படுவது.. பெண்ணின் உடல் வலியையும் ஆணின் மன வேதனையையும் ஒரே புள்ளியில் வைத்து பார்ப்பது எந்த வகையில் நியாயம் என்று கேட்கலாம்? புரிந்தவர்களுக்கு பதில் சொல்லலாம் புரியாமல் கேட்பவர்களுக்கு இந்த விவகாரத்தில் பதில் சொல்லி திருப்திபடுத்தவே முடியாது..

கணவன் அல்லாத ஆண் மூலம் நிகழும் பாலியல் பலாத்காரத்திற்கும், கணவனின் அத்துமீறலுக்கும் மலையளவுக்கு வித்தியாசம் உண்டும்.. முன்னதில் பெண்ணுக்கு ஒட்டுமொத்த மனமே, கடுமையான சிதைவுக்கு ஆளாகும்.. ஆனால் பின்னதில், தவிர்க்க முடியாத சலிப்பான மனநிலைதான் மேலோங்கும்..

வெளிப்படையாக சொன்னால், பெண்ணின் விருப்பமே இல்லாவிட்டாலும் அவளை ஆண் வற்புறுத்தி அவனின் இச்சையை தணித்துக்கொள்ளமுடியும்.. ஆனால் ஒரு பெண், ஆணின் விருப்பம் இல்லாமல் அவனிடமிருந்து முழு சந்தோஷத்தை பெறவே முடியாது.. ஏனெனில் கலவிக்கு தயாராக்கும் விஷயத்தில் ஆண், பெண் உடலமைப்புகள் அப்படி அமைந்துபோயுள்ளன..

வீட்டுவேலை பளு காரணமாக, உடல் அசதி, தலைவலி போன்றவற்றால் ஆளாகும் மனைவியை கணவன் சீண்டுவதும்,பல தடவை சீண்டலுக்கு பின் ‘பொழுதானா இதே ரோதனையா போச்சு,, என் உடம்பு எக்கேடு கெட்டுப்போனா உனக்கென்ன..வந்து தொலை’’ என்ற சலிப்பான மனநிலையில் கணவனுக்கு மனைவி இடம் கொடுக்கிறாள். தன்னை உச்சத்திற்கு கொண்டுபோவான் என்றெல்லாம் ஒவ்வொரு முறையும் மனைவி எதிர்பார்ப்பதில்லை.. தொல்லை ஓய்ந்து நிம்மதியா தூங்கவிட்டால் போதும் என்பதுதான் இல்லத்தரசியின் மனநிலையாக இருக்கும்

மனைவி முழு சம்மத்துடன் ஆர்வமாக சேரும்போது கிடைக்கும் பலனுக்கும்.. புருஷன்காரனுக்காக என்று பொறுத்துக்கொண்டு இருக்கும்போது கிடைக்கும் பலனுக்கும் இடையிலான வித்தியாசம் கணவனுக்கும் தெரியும்..

இரவில் சோர்வுடன் தூங்குபவர்கள் அசதி கலைந்து விடியற்காலையில் கலக்க நேரிட்டால் அங்கே இரு தரப்பு ஈடுபாட்டுக்கு நிறையவே சாத்தியம் உண்டு..இதற்கு விஞ்ஞான ரீதியாக சில சிறப்பு காரணங்கள் உண்டு என்று பிரிட்டீஷ் மெடிக்கல் ஜோர்னல் ஆய்வு அறிக்கை ஒன்று சொல்கிறது.. இன்னும் பார்க்கப்போனால் கூடுவதற்காக இருதரப்புக்கும் சகலமும் சிறப்பாக செயல்படும் நேரம் அதிகாலை 5.48 என்று அடித்தே சொல்கிறது அந்த ஆய்வறிக்கை.
வேகமாக தோன்றி வேகமாக தணிந்துபோகிற தன்மை கொண்ட ஆண் வர்க்க பிரதிநிதியான அவனுக்கு, அந்த நேரத்தில் ஆடி அடங்கிவிடவேண்டும் என்பது ஒன்றேதான் குறிக்கோள்.. மற்றபடி எதிராளியை பற்றி நினைப்பு பெரிதாக தோன்றாது..

அவ்வளவு ஏன்? மனைவி மீதான பாலியல் வன்முறை என்று சொல்கிறார்களே… அந்தப் பெண்களே அவர்களின் வாயால் பாலியல் உறவு என்பது இருதரப்பு விஷயம் என்பது மாதிரியா பேசுகிறார்கள்..? நாலு நாள் பட்டினிபோட்டா தானா சரியாபோயிடும் என்று தானே ஜாடைமாடையாக அந்த உறவை பற்றி குறிப்பிடுகிறார்கள்..

அழுகின்ற குழந்தைக்கு பாலூட்டுவது மாதிரி புருஷனுக்கு தன்னை கொடுப்பதை சாப்பாடு போடுவதுபோலத்தான் கருதுகிறார்கள்.. அதில் தங்களுக்கும் எந்த ஆசையும் இல்லாதது போலத்தானே காட்டிக்கொள் கிறார்கள்.. சொல்லப்போனால் உண்மையும் அதுதான்.. அவர்களின் உணர்வுகள் தலைதூக்க, அன்பு, மூளை, மனம் போன்றவை ஒன்று சேர்ந்தால்தான் சாத்தியம்..

பார்த்தஉடனேயோ, அல்லது நினைத்த உடனேயோ பற்றிக்கொள்ளும் ஆண்களின் உணர்வை போன்றதல்ல பெண்களின் உணர்வுகள்.

விருப்பத்தோடு நடப்பதை நினைத்து மனதுக்குள் சிலாகித்துக்கொள்ளும் மனைவிமார்கள், விருப்பமின்றி நடப்பதை 24 மணிநேரமும் மனதுக்குள் சுமந்துகொண்டு திரிவதில்லை..

இங்கே கவனமாக கருத்தில் கொள்ளப்படவேண்டியவை.. அதிகபோதை, அருவெறுப்பான துர்நாற்றம், நோய் தொற்றும் அபாயம், இயற்கைக்கு மாறான வழிமுறை, பொருத்தமற்ற சூழல், மனைவியின் ஆரோக்கியத்தில் அசாதாரணமான நிலை, சித்ரவதை படுத்துதல்.. போன்றவை… இப்படியான விஷயங்களைத்தான் தாம்பத்ய உறவில் குரூரமான பாலியல் வன்முறை என வகைப்படுத்தலாம்..

குடும்பத்தை பொறுத்தவரை கோபத்திலும் சரி, மோகத்திலும் சரி விட்டுக்கொடுத்தல் இல்லையென்றால், அங்கே கணவன் மனைவி இடையே விரிசலுக்கான விதை விதைக்கப்பட்டுவிடும்..

நாட்டில் உள்ள குடும்பங்களில், தாம்பத்ய வாழ்க்கை என்பது முக்கால் வாசிக்கும் மேற்பட்ட தடவை இப்படித்தான் சர்வசாதாரணமாக கடந்துபோய் கொண்டிருக்கும்..

இதைபெரிதாக எடுத்துக்கொள்ளும் பெண்களில், சதவீத அளவு என்று பார்த்தால் மிகவும் சொற்பம்.. அவர்களிலும் பொதுவெளியில் வந்து பேசுகிறவர்கள் மிகமிக சொற்பம்.. இந்த சொற்பம்தான் இங்கே விஸ்வ ரூபமாக காட்டப்படுகிறது என்பதுதான் கோளாறே..

அவசரம், அதி நிதானம் என இரண்டற கலந்ததே இல்லற தாம்பத்யம்.